நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க வேண்டும்: திமுக எம்பி வில்சன் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்தார்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து, நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க வேண்டும், என்று திமுக எம்பி வில்சன் நேற்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019 மற்றும் தேசிய பல் மருத்துவ ஆணைய சட்டம் 2023 ஆகியவற்றில் அவசர திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தியும் நாடு முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்த மிக முக்கியமான பொது பிரச்னை பற்றி விவாதிக்க, அவையின் பட்டியலிடப்பட்ட அலுவல்களை நிறுத்தி வைக்க வேண்டும்.

வினாத்தாள் கசிவு, திட்டமிடப்பட்ட தேர்வு முறைகேடுகள், ஆள்மாறாட்டம் மற்றும் பிற குளறுபடிகள் தொடர்ந்து நடப்பதன் மூலம் நீட் தேர்வின் நம்பகத்தன்மை மீண்டும் மீண்டும் சீர்குலைந்துள்ளது. கல்வி என்பது அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் வருகிறது. நாடாளுமன்றம் உயர்கல்விக்கான தரநிலைகளை நிர்ணயிக்க முடியும் என்றாலும், சேர்க்கை மற்றும் கல்வி நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு.

தற்போதைய சட்டக் கட்டமைப்பு சேர்க்கை முறையை நியாயமற்ற முறையில் ஒன்றிய மயமாக்கியுள்ளது, கூட்டாட்சி அமைப்பைச் சீர்குலைத்துள்ளது மற்றும் மாநிலங்களின் சொந்தக் கல்வித் தேவைகள் மற்றும் சமூக நிலவரங்களுக்கு ஏற்ப சேர்க்கை முறைகளை உருவாக்கும் நெகிழ்வுத்தன்மையை மாநிலங்களிடமிருந்து பறித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 மற்றும் தேசிய பல் மருத்துவ ஆணையச் சட்டம், 2023 ஆகியவற்றைத் திருத்துவதும், நீட் தேர்வை ரத்து செய்து, கல்வித் தரத்தைப் பராமரிக்கும் அதே வேளையில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ நிறுவன சேர்க்கைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்குவதும் அத்தியாவசியமாகி உள்ளது.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டங்கள், தொடர்ச்சியான தேர்வு முறைகேடுகள், தேர்வு முறையின் மீதான பொது நம்பிக்க இழப்பு, கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி மற்றும் கல்விக்கான உரிமை ஆகியவற்றின் மீதான தொலைநோக்கு பாதிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, விதி 267-ன் கீழ் அவையின் அலுவல்களை உடனடியாக நிறுத்தி வைத்து, இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 மற்றும் தேசிய பல் மருத்துவ ஆணையச் சட்டம் 2023 ஆகியவற்றில் தகுந்த திருத்தங்களைச் செய்து நீட் தேர்வை ரத்து செய்ய அரசாங்கத்தை அவை வலியுறுத்த வேண்டும்.

Related Stories: