போராட்டத்தின் எழுச்சியை சகித்துக்கொள்ள முடியாமல் மாணவர்கள் மீது ஒன்றிய அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது: மாணிக்கம் தாகூர் கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் விவகாரத்தில் முறைகேடுகள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற விவகாரத்தில் பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதானை பதவி நீக்க கோரி அவரது வீட்டின் அருகே தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் ராகுல்காந்தியை மோடி அரசு இத்தகைய அநாகரீக அணுகுமுறை கடைபிடித்து கைது செய்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20ம்தேதி முதல் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நாளில் பேரணி செல்வதாக அவர்கள் அறிவித்தனர்.

இந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நாளில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்வதாக அறிவித்தார். இதையடுத்து சில நாட்களில் மருத்துவ சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேநாளில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமித்ஷாவின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

மாணவர்கள் மீது தடியடி நடத்தி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டது ஆட்சியாளர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது. மாணவர்களின் எழுச்சியை சகித்துக் கொள்ள முடியாத பாஜ அரசு இத்தகைய அடக்குமுறைகளை ஏவி வருகிறது.

சர்வாதிகார நாட்டில் தான் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை காண முடியும். ஆனால், மோடி ஆட்சியில் சர்வாதிகார அணுகுமுறையோடு மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய விலையை மோடி அரசு வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: