நாகர்கோவில் சிறையில் நடந்த வியாபாரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

நாகர்கோவில்: நாகர்கோவில் சிறைக்குள் நடந்த வியாபாரி சபரிவர்மன் கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (34). மாற்று திறனாளி. இவர் வீட்டு அருகில் மளிகை கடை நடத்தி வந்தார். பா.ஜ. கிளை பொறுப்பிலும் இருந்து வந்தார். இவருக்கு ஆனந்தவல்லி என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த 9ம்தேதி சபரிவர்மன் தனது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக கூறி, தென்தாமரைக்குளம் போலீசார் கைது செய்து, 14 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். முதலில் ஜாமீனில் விடுவித்தவர்கள், பின்னர் சபரிவர்மனை காவல் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த 13ம்தேதி அதிகாலையில் சிறையில் சபரிவர்மன் இறந்தார்.

அவரது உடலை அவசர, அவசரமாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிணவறைக்குள் கொண்டு சென்றனர். உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்து சிறப்பு மருத்துவ குழு பிரேத பரிசோதனை நடத்தியதில், சபரிவர்மன் சிறைக்குள் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவக்குமார் மற்றும் 8 கைதிகள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

சபரிவர்மனின் மனைவிக்கு அரசு வேலை, 2 சென்ட் நிலம், ரூ.10 லட்சம் நிவாரணம், மகனின் படிப்புக்கான வைப்பு தொகை ஆகியவை நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் நாகர்கோவில் சிறையில் இருந்த 8 கைதிகளும் கடந்த சில நாட்களுக்கு முன், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த வழக்கில் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் விசாரித்தால், முழு பின்னணி தெரியாது. எனவே வழக்கை உடனடியாக சிபிசிஐடி அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் இதை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சபரிவர்மன் கொலை வழக்கை, தமிழ்நாடு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் மரிய பிரான்சிஸ்கா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இந்த வழக்கு தற்போது வரை நேசமணிநகர் போலீசார் விசாரித்து வந்தனர். அவர்கள் வழக்கில் சேகரித்த முதற்கட்ட ஆவணங்கள், வாக்குமூல பதிவுகள், தடயங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பார்கள்.

Related Stories: