நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயராக ராமகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். இவரது வீடு டவுன் வேணுவன குமாரர் கோவில் தெருவில் அமைந்துள்ளது. 20ம் தேதி இரவு இவரது வீட்டிற்குள் 3 வாலிபர்கள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லை டவுனை சேர்ந்த முகமது அப்சல் (25), அப்துல் அஜீஸ் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். விசாரணையில் முகமது அப்சல் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வந்ததும், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆட்டோவை வாடகைக்கு விட்டுவிட்டு நெல்லைக்கு வந்ததும் தெரியவந்தது. அப்துல் அஜீஸ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகளுக்கான செலவுக்கு அவருக்கு பணம் தேவைப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நண்பர்களான இவர்கள் இருவரும் அவ்வப்போது மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி சாலைகளில் சுற்றித் திரிவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மேயர் ராமகிருஷ்ணன் விளையாட்டுப் போட்டிகளுக்காக வாலிபர்களுக்கு உதவி செய்து வருவதால், அவரிடம் கிரிக்கெட் பேட் வாங்க பணம் கேட்டால் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவரது வீட்டிற்குச் சென்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் மேயர் வீட்டில் இல்லை என அங்கிருந்தவர்கள் கூறியதை தொடர்ந்து அவர்கள் வெளியேறிவிட்டனர் என்றும், தாங்கள் எந்தவித கெட்ட நோக்கத்துடனும் வீட்டிற்குள் நுழையவில்லை என்பதை விளக்கமாக கூறுவதற்காகவே மீண்டும் மேயர் வீட்டிற்குச் சென்றதாகவும், வேறு எதற்காகவும் செல்லவில்லை என்றும் போலீசாரிடம் கூறியதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலம் உண்மைதானா என்பது குறித்தும், மேயர் அளித்த புகார் மற்றும் சேகரிக்கப்பட்ட மற்ற தகவல்களின் அடிப்படையிலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
