சென்னை: வைகோ, துரை வைகோ இருவரும் பச்சோந்தி என மல்லையா சத்யா குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் தவெக கூட்டணியில் சேர ரூ.50 கோடி பேரம் பேசியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.முன்னாள் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினரும், திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவருமான மல்லை சத்யா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ மீது பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: வைகோவின் தற்போதைய அரசியல் நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?
வைகோ எப்போதுமே ஒரு கொள்கையில் நிலையாக இருந்தவர் இல்லை. திராவிட இயக்கத்தின் நேர் எதிர் கருத்தியலாக இருக்கின்ற மதவாத பாஜவுடன் கைகோர்க்கின்ற முதல் பணியை வைகோ தான் செய்தார். ‘‘காங்கிரசுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை” என்பார். ஆனால் காங்கிரசைப் புகழ்ந்து பேசுவார். இப்படி ஒரு நிலையற்ற தன்மையையே அவர் எப்போதும் வைத்திருக்கிறார்.
‘‘மகன் அரசியலுக்கு வரமாட்டான்” என்று வைகோ முன்பு கூறியிருந்தாரே?
கடந்த 4 ஆண்டுகள் வரை, தன் மகன் அரசியலுக்கு வரமாட்டான் என்று வைகோ கூறினார். ஆனால், அரசியல் படுத்தப்படாத தன் மகன் துரையை அரசியலுக்குக் கொண்டு வந்து, என்னை போன்ற லட்சியவாதிகளை கட்சியில் இருந்து நீக்குகின்ற வேலையைத் தொடர்ச்சியாகச் செய்தார். இறுதியாக என் மீதும் துரோகப் பழியைச் சுமத்தி வெளியேற்றினார். வைகோவை கேட்டால் ‘‘நான் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன், பதவி ஆசை இல்லை” என்பார். கட்சி ஆரம்பித்து 33 ஆண்டுகள் ஆகிறது. மாறாத ஒரே பதவியாக வைகோ வகித்து வருகின்ற பொதுச்செயலாளர் பொறுப்பு மட்டுமே நிலையாக இருக்கிறது. மற்ற அனைத்துப் பொறுப்புகளும் மாற்றப்பட்டுவிட்டன.
வைகோவின் நாடாளுமன்றப் பயணம் மற்றும் திமுகவின் ஆதரவு பற்றி உங்கள் கருத்து என்ன?
வைகோவின் நாடாளுமன்றப் பணிக்காலம் என்பது ஏறக்குறைய 30 ஆண்டுகள் 3 மாதம். அதில் 29 ஆண்டுகள் திமுக தயவால்தான் அவர் நாடாளுமன்ற மேலவையில் இருந்தார். கலைஞரின் தயவால் 26 ஆண்டுகள் அவர் நாடாளுமன்றத்தில் இருந்தார். அதற்குப் பின்பும், மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, அவரும் பெருந்தன்மையோடு இவரை 6 ஆண்டுகள் நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்பினார். தேச துரோக வழக்கின் காரணமாக வைகோ சிறைக்குச் செல்வார் என்ற சூழல் வந்தபோது, மதிமுகவில் அடுத்ததாக யாரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அப்போது வைகோ உடனடியாக, ‘‘இந்த நாடாளுமன்ற பதவி என்பது வைகோவுக்காகத்தான் வழங்கப்பட்டது, மதிமுகவுக்கு அல்ல” என்றார்.
துரை வைகோ மீது நீங்கள் வைக்கும் சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டுகள் என்னென்ன?
வைகோ 1995ல் மதிமுக தொடங்கப்பட்ட அந்த நாள் வரையிலும் அண்ணா நகர் டவர் பிளாக்கில் வாடகை வீட்டில்தான் இருந்தார். கட்சி தொடங்கப்பட்ட பின்னர்தான் அண்ணா நகரில் ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி வீடு கட்டினார். திமுகவிலிருந்து விலகி வைகோ மதிமுகவைத் தொடங்கினார். வைகோவின் இக் கட்சிக்காக பல தொண்டர்கள் தீக்குளித்தனர். கட்சிக்கு நிதி கொடுப்பதற்காக பலர் தங்கள் சொத்துகளை இழந்தனர். இப்படி தொண்டர்கள் தங்கள் உயிரையும் உடைமையையும் கொடுத்து தியாகம் செய்தனர். அதை கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்காமல், மதிமுக கட்சியை வைத்து பிசினஸ் நடத்தி பல கோடி சம்பாதிப்பதை வைகோவும் துரை வைகோவும் தொடர்ந்து செய்து வருகின்றனர். இவர்கள் குவிக்கும் பணம் ரத்தப் பணம். இந்த ரத்தக் கறை அவர்களை விட்டு எப்போதும் போகாது.
துரை வைகோ, தான் ஏதோ மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளி என்று தம்பட்டம் அடிக்கிறார். அவர் வெறும் சிகரெட் வியாபாரம் (ஐடிசி நிறுவனத்தின் சிகரெட் ஏஜென்சி) தான் செய்து வந்தார். அவருக்கு இன்று சென்னை மண்டலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் எப்படி வந்தது? அண்ணா நகரின் பிரதான சாலையில் ஒரு நட்சத்திர விடுதி (4 கிரவுண்ட் இடத்தில்) துரைக்கு இருக்கிறது. அதன் இன்றைய மதிப்பு 80 முதல் 100 கோடி ரூபாய் இருக்கும். செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஹிராநந்தினி’ என்று சொல்லப்படுகின்ற ஐந்து நட்சத்திர குடியிருப்பில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட்கள் உள்ளன. அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில், கழிப்பட்டூரில் 10 கிரவுண்ட் இடம் உள்ளது. (இன்றைய மதிப்பு ஏறக்குறைய 15 கோடி ரூபாய்). அதில் 5 கிரவுண்டில் துரை ஒரு அரண்மனை போன்ற பங்களாவை கட்டியுள்ளார்.
அதைச் சுற்றி சுருள் மின்வேலி அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சொத்துகள் எல்லாம் எப்படி வந்தன என்பதை துரைதான் விளக்க வேண்டும். கனடா நாட்டில் 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் உள்ளன, வைகோ குடும்பமாக கனடாவில் செட்டிலாக முயற்சிக்கிறார். சிகரெட், பீடி விற்று வைகோ ஒன்றும் பணம் சம்பாதிக்கவில்லை எல்லாம் அரசியல் பணம். சென்னைக்கு வந்தபோது, அரசு வாடகை வீடு வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் மூலம், கலைஞரிடம் விண்ணப்பம் செய்தார். ஆனால் கட்சிக்கு கெட்ட பெயர் வரும் என்று கூறி கட்சிக்காரர்களுக்கு வாடகை வீடு தர முடியாது என்று கூறிவிட்டார். அப்படிப்பட்டவருக்குத்தான் இன்று இவ்வளவு சொத்துகள்.
மதிமுகவின் தேர்தல் நிதி மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்து ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா?
2016ம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்டபோது மதிமுக 27 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது மதிமுக நிதி வசூல் செய்தது வெறும் 2 முதல் 3 கோடி ரூபாய் தான். ஆனால், வங்கியின் மூலமாக ஒரு வேட்பாளருக்கு 25 லட்சம் ரூபாய் என்று பரிவர்த்தனை செய்யப்பட்டது. இது கடந்து, ஒவ்வொரு வேட்பாளருக்கும் ரொக்கமாக 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆக, ஒரு தொகுதிக்கு 50 லட்சம் வீதம் 27 தொகுதிகளுக்கு ஏறக்குறைய பதிமூன்றரை கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த பணம் எங்கிருந்து வந்தது? அதேபோல், 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போது போட்டியிட்ட வேட்பாளர் மருத்துவர் கிருஷ்ணன். ஒருநாள் எனக்கு வைகோவிடம் இருந்து அழைப்பு வந்தது, ‘‘தேர்தலுக்கான நிதி தருவார்கள், பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.
அதன்படி கொடநாடு எஸ்டேட்டில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் அங்கு சென்று அவர்கள் கொடுத்த 50 லட்சம் ரூபாயைப் பெற்று வந்தேன். ஆனால், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ணனுக்காக கொடுக்கப்பட்ட அந்த தேர்தல் நிதியை, வைகோ உடனடியாக தனக்கு அனுப்பச் சொன்னார். பல்லடம் முத்துரத்தினம் தான் அந்த பணத்தைப் பெற்றுக்கொண்டு வைகோவிடம் சேர்த்தார். தற்போதைய அரசியல் சூழலில் சமூக வலைதளங்களில் மதிமுக குறித்து வெளியாகும் செய்திகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்ற இருவரை, தவெக பக்கம் இழுப்பதற்காக 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், வைகோவை முக்கிய நபர்கள் சந்தித்ததாகவும் செய்திகள் வருகின்றன. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி கொடுத்துவிட்டு, மீதியை இவர்கள் எடுத்துக் கொள்வதாக திட்டம் என்றும் சமூக வலைதளங்களில் வந்துள்ளது. மேலும், வைகோவை டெல்லி பிரதிநிதியாக அனுப்பப் போகிறார்கள், அமைச்சராக்கப் போகிறார்கள் என்றெல்லாம் ஒரு மாயமாலத்தை உருவாக்கி, தங்களுக்குப் பெரிய வரவேற்பு இருப்பதாக ஒரு பிரம்மையைக் கிளப்புகிறார்கள். வெறும் 1% வாக்குக் கூட இல்லாத ஒரு கட்சிக்கு இவ்வளவு டிமாண்ட் ஒருபோதும் இருக்காது. வைகோ, துரை வைகோ இருவரும் பச்சோந்தி போல் இருப்பார்கள். எங்கு பணம் கிடைக்குமோ, அங்கு சென்று விடுவார்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
வைகோவும் அவருடைய மகனும் உங்களை தவறாக வழிநடத்தி விடுவார்கள், எச்சரிக்கையாக இருங்கள். நேற்று வரை தவெகவை குறைத்து மதிப்பிட்டுப் பேசியவர் தான் வைகோ. இன்றைக்கு ஆட்சிக்கு வந்தவுடன், அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமாவை விட விஜய் சிறந்தவர் என்று புகழ்கிறார் என்றால், இந்த கூட்டத்திடம் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். துரையின் பொதுவாழ்க்கை என்பது களங்கப்படுத்தப்பட்ட ஒன்று. திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட விரும்பியபோது, வைகோ முரண்டு பிடித்து அண்ணன் தளபதியிடம் மன்றாடி அந்த தொகுதியைத் தன் மகனுக்குப் பெற்றார். ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரை, ‘‘உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்” என்று நன்றியற்ற முறையில் பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
