அறந்தாங்கி, ஜூன் 15: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்ட மாணவ, மாணவிகள் சிறப்பான தேர்ச்சி விகிதத்தையும், உயர்ந்த மதிப்பெண்களையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 97.57% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் முதல் இடத்தையும், 94 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றும், 12ஆம் வகுப்பில் 95.88% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 18வது இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
மேலும் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 56 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றும், 10ம் வகுப்பு அரசு பொது 97.9% தேர்ச்சி விகிதம் பெற்றும், 12ஆம் வகுப்பில் 96.70% தேர்ச்சி அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். இதையொட்டி சாதனை படைத்த பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் முகமதுபர்வேஸ், அறந்தாங்கி வருவாய் கோட்டாச்சியர் அபிநயா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், கனகராணி, கலாராணி, அறந்தாங்கி வட்டாச்சியர் கவியரசு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
