சைபர் புல்லிங்

நன்றி குங்குமம் தோழி

ஒரு மனிதனை நேரில் சந்தித்து அச்சுறுத்துவது போலவே, இணையம் வழியாக நடத்தப்படும் வன்முறைதான் சைபர் புல்லிங் (Cyber Bullying). தொலைபேசி, இணையம், சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருவரை தொடர்ந்து அச்சுறுத்தல் செய்வது, அவதூறு பரப்புவது, மன உளைச்சலுக்கு உட்படுத்துவது போன்றவை இதில் அடங்கும். இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளதால், சைபர் புல்லிங் என்பது ஒரு தீவிரமான சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் போன்ற தளங்கள் வழியே ஒரு நபரை தேவையற்ற முறையில் தொந்தரவு செய்யப்படுகிறது.

சைபர் புல்லிங் செய்பவர்கள் பெரும்பாலும் தங்கள் அடையாளத்தை மறைத்தே அநாமதேய நிலையில் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். சமயங்களில் அந்நபர் நமக்கு நன்கு தெரிந்த நம்மில் ஒருவராகவோ, நம்மை தொந்தரவு செய்ய முற்படுபவராகவோ இருக்கலாம். இந்த இணைய வழி அச்சுறுத்தல் மூலம் பணம் அல்லது தனக்கு சாதகமான செயல்களை தேவையாக முன்வைப்பார்கள். தவிர்த்து, ஒரு நபரை மன ரீதியாக தொந்தரவு செய்வதை பொழுதுபோக்காக எடுத்துக்கொள்கின்றனர். சைபர் புல்லிங் செய்யும் நபர்கள் இதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பமுறைகளை கையாளுகின்றனர். உள்நாட்டு எண்கள் அல்லாமல் வெளிநாட்டு தொலைபேசி எண்களை பயன்படுத்துவது அவர்களின் முதல் உத்தியாக இருக்கிறது. மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் அல்லது வலைத்தளங்கள் மூலம் வங்காளதேசம், அமெரிக்கா போன்ற வெளிநாட்டு எண்களை குறுகிய காலத்திற்கு பயன்படுத்தி, அதன் மூலம் மிரட்டல்களை விடுகின்றனர். பயனர் தனியுரிமை அமைப்புகள்(User privacy setting), பயனர் சரிபார்ப்பு அமைப்பு (User verification system), சமூக ஊடக படிமுறை (Social media algorithm), உள்ளடக்கம் நெறிப்படுத்தல் பொறிமுறை (Content moderation mechanism), பலவீனமான இணைய விழிப்புணர்வு (Weak cyber awareness) போன்ற நுட்பங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தாக்குதல்களை நடத்துகின்றனர். மென்ஸ் ஆப்(MensApp) போன்ற சமூக ஊடகம், உடனடியாக குறுஞ்செய்திகளை பகிரும் செயலிகள், மின்னஞ்சல் சேவை, ஆன்லைன் விளையாட்டு சமூகம் போன்றவற்றில் உண்மையான அடையாளமின்றி உள்நுழைந்து சைபர் புல்லிங் தாக்குதல்களை நடத்துகிறார்கள். இதை இன்னும் மோசமாக்கும் எண்ணத்தில் டீப் ஃபேக் இமேஜ் உருவாக்குவது போன்றவற்றையும் செய்வார்கள். ஏதாவது சில காரணங்களால் தனிப்பட்ட பழிவாங்கல் எண்ணமுடையவர்களும் இதில் ஈடுபடுகின்றனர். சைபர் புல்லிங் செய்யும் நபர்கள் தங்கள் அடையாளத்தை மறைப்பது மட்டுமின்றி பல வகையான மெய்நிகர் தனியார் பிணையம் (VPN), குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கிப்போடும் டிஸ்போஸபிள் இ-மெயில், பாட்(Bot) மூலம் உருவாக்கப்படும் செய்திகள் போன்றவற்றின் வழியே தொடர்புகொண்டு தாக்குகின்றனர்.

பெரும்பாலும் சைபர் புல்லிங் செய்வதற்கு டாக்ஸிங் (Doxing) எனும் முறையை கையாளுகின்றனர். இது ஒருவரின் தொடர்பு எண், முகவரி, பணிபுரியும் இடம், புகைப்படங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை அவரின் அனுமதியின்றி இணையத்தில் கசியவிட்டு அவர்களை மிரட்டுவது தான் டாக்ஸிங். மேலும், இதில் சோஷியல் இன்ஜினியரிங் முறையை பயன்படுத்துகின்றனர். மெஷின் அட்டாக் செய்வதும் உண்டு. அதாவது, ஒரு இடத்தில் நின்று புகைப்படம் எடுக்கிறீர்கள் எனில் அதன் லொக்கேஷன் முதற்கொண்டு அறியக்கூடிய மெட்டா டேட்டாவை எடுத்து அதை பயன்படுத்திக்கொள்வார்கள். ஒருவருடைய எத்தகைய தரவுகளை கொண்டும் நிறைய டிஜிட்டல் நுட்பங்களை பயன்படுத்தி மிரட்டல் செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்வதும் சைபர் புல்லிங்தான். மேலும், இவர்கள் கையாளுகின்ற பெரும்பாலும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு உத்தி, போலியான சமூக ஊடக கணக்குகளை உருவாக்குதல். கவனிக்க முடியாத மிகச்சிறிய மாற்றங்களுடன் உண்மையான கணக்கை போலவே போலியான ஒன்றை உருவாக்கி தேவையில்லாத பதிவுகளை போடுவது, ஃபாலோவர்ஸ்களுக்கு அந்நபரை போலவே செய்திகளை அனுப்புவது போன்றவற்றை செய்வார்கள். இதனால் ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது உண்மையான கணக்கை வைத்திருக்கும் நபரிடம் ‘இதை நீதான் செய்தாய், செய்திகளை அனுப்பியிருக்கிறாய்’ என்று மிரட்டி பணம் கேட்பார்கள். சைபர் ஸ்டாகிங் செய்வதன் மூலம் ஒருவரை தொடர்ந்து கண்காணித்து டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி அவர்களை தொந்தரவு செய்வார்கள். ஜிபிஎஸ் (GPS), லொக்கேஷன் டிராக் செய்வது, சமூக ஊடக பக்கங்களை கண் காணிப்பது, ஸ்பைவேர் செயலிகள் மூலம் மறைமுகமாக கண்காணிப்பார்கள். மேலும், புகைப்படங்களை மார்பிங் செய்வது, வீடியோ எடிட்டிங் செய்வதன் மூலம் மிரட்டல்கள் விடுவார்கள். உதாரணமாக சமீபமாக IPL கமெண்ட்ரியில் நடக்கும் சில தருணங்களை வேறு நபர்களை வைத்து எடிட்டிங் செய்கின்றனர். ஜோடியாக அமர்ந்திருக்கும் திசையில் கேமரா திரும்புகிறது. அது காணொளியாக திரையில் தெரிகிறது எனில், தற்போது பலரும் அதை தங்கள் புகைப்படங்களை வைத்து எடிட்டிங் செய்து, IPL கமெண்ட்ரியில் தாங்கள் இருப்பது போல வெளியிடுகின்றனர். இதற்காக ஏஐ ப்ராம்ட்களை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற விஷயங்களே சைபர் புல்லிங் செய்பவர்களுக்கு சாதகமாக அமையலாம். எடிட் செய்த வீடியோக்களை வீட்டில் காட்டி விடுவேன், இணையத்தில் விட்டுவிடுவேன் என்றெல்லாம் மிரட்டலாம். ஏஐ ப்ராம்டிங் மூலம் போலியான உண்மை போலவே தெரியும் போலி பத்திரங்களை உருவாக்கி அதன் மூலம் மிரட்டல் விடலாம்.

இந்தியாவில் 2020ம் ஆண்டு நடந்த பாய்ஸ் லாக்கர் ரூம் (Bois locker room) என்கிற சம்பவம் சைபர் புல்லிங்கில் அடங்கும். அதாவது, ஒரு இன்ஸ்டாகிராம் குழு அமைத்து அதில் டீன் ஏஜ் பருவ சிறுவர்களை இணைத்தனர். அவர்கள் பெண்களிடம் காதலிப்பது போல பேசி, பழகி தனிப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை அனுப்பச் சொல்லி வாங்கிக்கொள்கின்றனர். அவர்களுக்கு கிடைக்கும் புகைப்படங்களை குழுவில் பகிர்ந்து கொள்வார்கள். குழுவில் உள்ள ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட பெண்களை மாறி மாறி மிரட்டுவார்கள். இது தொடர்பான சில ஸ்க்ரீன்ஷாட் ஆதாரங்களை வைத்து போலீசார் இச்சம்பவத்தை கண்டறிந்தனர். சைபர் புல்லிங் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர மன அழுத்தம், பீதி, சமூகத்திலிருந்து தனித்திருத்தல் மற்றும் தூக்கமின்மை போன்ற உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் இதற்கு எதிராகப் பல சட்டப்பிரிவுகள் உள்ளன:

* தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 – பிரிவு 66C: இது அடையாள திருட்டு (Identity Theft) தொடர்பானது. பிறரின் கடவுச்சொல், டிஜிட்டல் கையொப்பம், சமூக ஊடக கணக்கு போன்ற அடையாள விவரங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது குற்றமாகும்.
* பிரிவு 66D : கணினி அல்லது இணையம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்வது(Cheating by Personation using Computer Resources) குறித்து பேசுகிறது. போலி சமூக ஊடக கணக்குகள் மூலம் ஏமாற்றுதல் இதன் கீழ் வரலாம்.
* பிரிவு 67: ஆபாசமான அல்லது ஒழுக்கக்கேடான தகவல்களை இணையத்தில் வெளியிடுதல் அல்லது பகிர்வது தொடர்பானது.
* பாரதிய நியாய சன்ஹிதா (BNS) கீழ் கிரிமினல் மிரட்டல், பாலியல் அச்சுறுத்தல், விருப்பமில்லாமல் பின்தொடருதல், தனியுரிமை மீறல் மற்றும் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படலாம்.
சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சைபர் புல்லிங் போன்றவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும். சமூக ஊடக கணக்குகளை பாதுகாப்புடன் கையாள வேண்டும். தேவையற்ற அளவுக்கு அதிகமான தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை தவிர்த்துக்கொள்ளலாம். துஷ்பிரயோகம் செய்யும் பதிவுகளை குறித்து அந்தந்த தளங்களில் புகார் அளிக்க வேண்டும். சைபர் க்ரைம் போர்ட்டலில் புகார் அளிக்கலாம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொழில்நுட்ப அறிவு மட்டுமின்றி, சமூக ஊடகங்களை எவ்வளவு நேரம், எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற உளவியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களை பயன்படுத்தும்போது நமது அடையாளத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம். தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தி, இணையதளங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

(புலனாய்வு தொடரும்…)

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

 

Related Stories: