நன்றி குங்குமம் தோழி
மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது பரோட்டாவும் அதற்கு ஈடான சால்னாவின் சுவையும்தான். இது மட்டுமில்லை… மல்லிகை இட்லி, ஜிகர்தண்டா, பரோட்டா, கறி தோசை போன்ற மற்ற ருசியான உணவுகளுக்கும் பெயர் போன மதுரையின் பல இடங்களுக்கு மத்தியில், தற்போது மதுரையில் ஒரு தனித்துவமான ஃபிளேவர் ப்ரொஃபைலை உருவாக்கியிருக்கின்றனர் மதுரையை சேர்ந்த உடன்பிறப்புகளான விஜயலக்ஷ்மி மற்றும் பாலாஜி.
“எங்க வீட்டில் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ஒரு ஸ்பெஷல் டிஷ் இருக்கும். காலை உணவுக்கு சுடச்சுட இட்லி கூட எங்க அம்மா வைக்கும் ‘மஞ்ச சாறு’ சேர்த்து சாப்பிட்டால்தான் எங்களுக்கு அந்த நாளே நிறைவா இருக்கும். மஞ்ச சாறு என்பது ஆட்டிறைச்சியின் விலா எலும்புகளும் அதனை சுற்றியுள்ள இறைச்சி பகுதியை சேர்த்து செய்யப்படும் ஒரு அசைவ உணவு. இந்த மஞ்ச சாறு எங்க முன்னோர்கள் காலத்திலிருந்து வழிவழியாக செய்யப்பட்டு வந்ததாக அம்மா சொல்லுவார். எங்க பாட்டி, பூட்டி போன்ற முந்தைய தலைமுறையினர் மதுரையில் மாங்குளம் பகுதியில் வாழ்ந்துள்ளனர். அவர்களின் காலத்திலேயே இது வீட்டில் செய்யப்படும் ஒரு தனித்துவமான உணவாக இருந்திருக்கிறது. ருசியான உணவாக மட்டுமின்றி, வீட்டில் யாருக்காவது சளி, காய்ச்சல், நோயெதிர்ப்பு சக்திக் குறைவு, சோர்வு போன்றவை ஏற்பட்டால் அச்சமயத்துக்கான ஒரு ஆரோக்கியமான உணவாகவும் இது இருந்திருக்கிறது. இவ்வாறு அடிக்கடி வீட்டில் செய்யப்படும் மஞ்ச சாறு அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு எங்கள் நாவில் என்றும் ருசி மறையாத தவிர்க்க முடியாத ஒரு உணவாக மாறிவிட்டது.
குழந்தைப் பருவத்தில் இருந்தே இதை சாப்பிட்டு வளர்ந்த எங்களுக்கு வெளியில் எங்கு சென்று எந்த உணவுகளை சாப்பிட்டாலும் பாட்டி, அம்மா கைகளில் சமைக்கும் அந்த பாரம்பரிய சுவை கிடைப்பதில்லை என்பதாகவே தோன்றும். மாங்குளம் பகுதியில் வசித்த முன்னோர்களின் பிரசித்திப்பெற்ற இந்த பாரம்பரியமான உணவினை முடிந்தவரை மாறாத சுவையில் மதுரை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் நானும் என் தம்பியும் எடுத்த முயற்சிதான் ‘மஞ்ச சாறு’ என்ற விஜயலக்ஷ்மி, தற்போது மதுரை மக்களிடையே மஞ்ச சாறு வரவேற்பை பெற்றுவருவதை விளக்குகிறார்.
“தொடக்கத்தில் இந்த உணவினை எல்லோருக்கும் தெரியப்படுத்த மதுரையின் வெவ்வேறு இடங்களில் சிறிய ஸ்டால்களை அமைத்தோம். ‘மஞ்ச சாறு’ என உணவின் பெயரிலேயே ப்ராண்ட் பெயரை வைத்தோம். நானும் தம்பியும் முழு நேர பணியாளர்கள் என்பதால் எங்களுக்கு கிடைக்கின்ற வார இறுதி நாட்களை பயன்படுத்திக்கொண்டோம். முதலில் மஞ்சள் நிறத்தில் சாறு பதத்தில் இருக்கும் மஞ்ச சாறினை பார்த்ததும் பெரிதாக யாரும் விரும்பவில்லை. மஞ்ச சாறு – இட்லி என்ற காம்பினேஷன் அவர்களுக்கு புதிதாக தெரிந்தது. சில நாட்களில் சாப்பிட்டு பார்ப்போம் என முயற்சித்தவர்கள் ருசி கண்டதும் வாடிக்கையாளர் ஆகிவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் சுடச் சுட இட்லியுடன் மஞ்ச சாறு சேர்த்து சாப்பிடுவதை மக்கள் விரும்பினர். ஆச்சரியம் என்னவென்றால் பெரியவர்கள்தான் சாப்பிடுவார்கள், குழந்தைகளுக்கும் இதை கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், மஞ்ச சாறு குழந்தைகளால்தான் அதிகம் விரும்பப்பட்டது. ஒவ்வொரு வாரமும் அங்கு போகலாம் என்று குழந்தைகளே பெற்றோர்களை கூட்டி வருவார்கள். ஆனால், நாங்க ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் ஸ்டால் அமைப்பதால் பலரும் எங்களை தேடி சிரமப்பட்டதாக சொல்வார்கள். ஒரு இடத்தில் கடையை வைத்தால், நாங்கள் வருவதற்கு எளிதாக இருக்கும் என்றார்கள். எனவே, ‘மஞ்ச சாறு’ தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது மதுரை ஐயர் பங்களா பகுதியில் ஒரு அவுட்லெட் திறந்துள்ளோம். ஞாயிற்றுக் கிழமைகளில் காலையில் மட்டும் 8 மணி முதல் 11 வரையிலும், மற்ற தினங்களில் மாலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் செயல்படும். நான் ஒரு
ஆர்.என்.டி அமைப்பில் மேலாளராகவும் என் தம்பி ஐடி துறையில் டெவலப்பராகவும் பணியாற்றுகிறோம் என்பதால் தற்போது இந்த நேரத்தில் உணவகத்தை நடத்தி வருகிறோம். உணவினை சுவை மாறாமல் தயாரிக்க என் அம்மா பெரும்பங்கு ஆற்றுகிறார்” என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“பாரம்பரியமான மஞ்ச சாறு ஒரு முழு ஆரோக்கியமான உணவு. இதில் மஞ்சள், சீரகம், மிளகு போன்ற ஜீரணத்திற்கு உகந்த மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுவதால், இது முழுமையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, மட்டனின் விலா எலும்புகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இறைச்சியை பயன்படுத்தி செய்யப்படுவதால், இது சளி மற்றும் சுவாசப் பிரச்னைகளுக்கு ஒரு சிறந்த மருந்து உணவாக கருதப்படுகிறது. காரம் குறைவாக இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி உண்கின்றனர். குறிப்பாக ஆட்டிறைச்சி உண்ண முடியாத முதியவர்களுக்கு இது எளிதான சத்தான உணவாக இருக்கும். எங்க மெனுவில் மஞ்ச சாறு தவிர, இன்னும் சில பாரம்பரிய உணவுகளையும் வழங்கி வருகிறோம்.
மட்டன் மஞ்ச சாறு மற்றும் நாட்டுக்கோழி சாறு: இட்லி, தோசை மற்றும் இடியாப்பத்திற்கு இது ஒரு சிறந்த காம்பினேஷனாக இருக்கும். மட்டன் பச்சை மிளகாய் கறி: இது பச்சை மிளகாயின் சுவையுடன் இருக்கும், ஆனால், காரமாக இருக்காது. தேங்காய் சேர்த்துச் செய்யப்படும் இந்த உணவு மதுரையிலேயே எங்களிடம் மட்டுமே கிடைக்கிறது. மட்டன் கீமா பன் தோசை: மதுரையின் புகழ்பெற்ற பன் பரோட்டா ருசியான உணவு. ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக நாங்க மட்டன், கீமா பன் தோசை வழங்குகிறோம். பெரும்பாலான மக்கள் இதை விரும்புகின்றனர். மட்டன் சுக்கா: நல்லெண்ணெய் கொண்டு பாரம்பரிய முறையில் சமைக்கப்படுவதால், இது குழந்தைகளும் சாப்பிடும் வகையில் மிக ருசியாக இருக்கும். ஆரம்பத்தில் மதுரையின் பல்வேறு இடங்களில் வார இறுதி நாட்களில் மட்டும் சிறிய ஸ்டால்களாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, மக்களின் பேராதரவால் தற்போது மதுரை ஐயர் பங்களா பகுதியில் ஒரு நிரந்தர அவுட்லெட்டாக மாறியுள்ளது. தற்போது எங்க வீட்டிலேயே ஒரு கிளவுட் கிச்சன் (Cloud Kitchen) அமைத்து உணவுகளை தயாரிக்கிறோம். சுவையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே சுவையில் வழங்கும்படி பல கிளைகளை தொடங்க வேண்டும் என்பதே எதிர்கால திட்டம்” என்றார்.
தொகுப்பு: ஆர்.ஆர்
