நன்றி குங்குமம் தோழி
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகாக பராமரிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் விரும்புகிறார்கள். இது காலங்காலமாக தொடர்ந்து வருகிறது. அதனால்தான் அவர்களின் தலைமுடி, சருமப் பராமரிப்புகளுக்கு பலவகையான அழகு சாதனப் பொருட்கள் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளன. முன்பு தங்களை அழகுப்படுத்திக் கொள்ள அழகு நிலையங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஃபேஷியல் மூலம் சருமப் பளபளப்பு மற்றும் வெயிலினால் ஏற்படும் கருமையினை போக்கினார்கள். கை மற்றும் கால்களை மசாஜ் செய்து அழகாக பராமரித்தார்கள். இன்று இவற்றின் அடுத்தகட்ட நிலை தான் ஏஸ்தெடிக் சிகிச்சைகள். காரணம், இதனை செய்து கொள்வதால், ஒருவரின் சருமம் பளபளப்பது மட்டுமில்லாமல் வயதினை குறைத்து அவர்களின் சருமத்தினை பொலிவுடன் காட்டவும் முடியும்’’ என்கிறார் ஓசூரை சேர்ந்த அபிராமி. இவர் ‘கலாஷேத்திரா’ என்ற பெயரில் ஏஸ்தெடிக் சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ஒன்றினை நிர்வகித்து வருகிறார்.
‘‘நான் அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. படிப்பினை முடித்த கையோடு சென்னையில் உள்ள பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு கல்லூரியில் படிக்கும் முன்பே அழகுக்கலை துறை மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது. அதை முறைப்படி பயில விரும்பினேன். 2014ல், ஏஸ்தெடிக் பயிற்சிகள் குறித்து யாருக்கும் தெரியாது. தரமான பயிற்சி நிலையங்களை தேடினேன். அப்போது என் சகோதரி மூலம் பயிற்சி பள்ளி ஒன்றினை கண்டறிந்து அங்கு சேர்ந்தேன். அதில் சருமத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே இயந்திரம் மூலம் தீர்வு காணலாம் என்பதை கண்டறிந்தேன். பயிற்சி முடிந்த பிறகு அந்த இயந்திரத்ைத வாங்க நினைத்தேன். ஆனால், அதன் விலை லட்சக்கணக்கில் இருந்தது. அந்த சமயத்தில் என்னிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை. வேறு என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் இருந்த போது எங்க வீட்டில் எனக்கு திருமணம் பேசி முடிச்சாங்க. குடும்பம், குழந்தை என்று பொறுப்புகள் அதிகரித்ததால்,வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்’’ என்றவர் ஆரம்பத்தில் வீட்டில் டியூஷன் எடுக்க துவங்கியுள்ளார்.
‘‘பணம் சேமிக்கவே நான் டியூஷன் சென்டர் ஆரம்பிச்சேன். பவானி டியூஷன் சென்டர் என்ற பெயரில் முதலில் வீட்டில் சிறிய அளவில் துவங்கினேன். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், தனியாக இடம் பார்த்து ஆசிரியர்களை நியமித்து செயல்படுத்தினேன். பள்ளிப் பாடங்கள் மட்டுமில்லாமல், NEET, JE என அனைத்திற்கும் இங்கு பயிற்சி அளித்தேன். மேலும், டியூஷன் முடித்த பிறகும் ஆன்லைன் மூலமாக பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகள் எவ்வாறு படிக்கிறார்கள் என்பது குறித்த அப்டேட்டும் செய்து வந்தோம். இரண்டு வருடத்தில் எங்களின் பயிற்சி முறை நன்றாக இருப்பதை அறிந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்களிடம் பயின்றார்கள். சேமிப்பும் சேர்ந்தது. அதைக் கொண்டு நான் லேசர் இயந்திரத்தை வாங்கினேன்.
2017ல் கலாஷேத்திரா என்ற பெயரில் ஏஸ்தெடிக் சிகிச்சை மையத்தினை ஓசூரில் துவங்கினேன். முதலில் வீட்டில் பத்துக்கு பத்து இடத்தில்தான் இயந்திரத்தை பொருத்தி ஒரு நாற்காலி மற்றும் பெட்டினை வைத்து சிகிச்சை அளித்தேன். வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைச்சது. இப்போது ஓசூரில் இரண்டு கிளைகள் துவங்கி நடத்தி வருகிறேன். மூன்றாவது கிளை பெரிய அளவில் துவங்கும் திட்டம் உள்ளது.
எனக்கு ஒரே ஒரு நோக்கம்தான் பெண்கள் தங்களின் தன்னம்பிக்கையினை அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஒருவர் தங்களை அழகாக பார்க்கும் போது அவர்களுக்குள் தன்னம்பிக்கை வளரும். பலர், பெண்கள் அழகு நிலையம் சென்று தங்களை அழகுப்படுத்திக் கொள்வதை தவறாக பார்க்கிறார்கள். அந்தக் கண்ணோட்டம் மாற வேண்டும். மாதம் ஒருமுறை பெண்கள் தங்களுக்காக சில மணி நேரம் ஒதுக்கி பர்சனல் கேரினை எடுத்துக்கொள்ள வேண்டும். இது அவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியினை கொடுக்கும். இதனை ஒரு பிராண்டாக மாற்ற வேண்டும். மேலும், பல தரமான சிகிச்சைகளை அறிமுகம் செய்ய வேண்டும்.
இந்த நான்கு வருடங்களில் ஓசூரில் கலா ஷேத்ரா பற்றி அனைவருக்கும் தெரிய என்னுடைய டீம்தான் காரணம். மணிமேகலை என்னுடன் நான்கு வருடம் பயணிக்கிறாங்க. எங்களுடைய ஏஸ்தெடிக் மையம் ஓசூர் நகரத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கு. சில நேரம் வேலை அதிகமாக இருக்கும் போது இரவு 11 மணி வரை எனக்கு துணையா இருப்பாங்க. அவங்க மட்டுமில்ல, இப்போது என்னிடம் வேலை பார்க்கும் மஞ்சு, கிரண், சேகர், ஸ்வாதி, நவீன், ராஜு இவங்க எல்லோரும் என்னுடைய பலம்னு சொல்லணும். எங்க அனைவரின் ஒரே நோக்கம் இதை ஒரு பிராண்டாக மாற்ற வேண்டும் என்பது தான்’’ என்றவர், அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி விவரித்தார்.
‘‘2014ல் சமூக வலைத்தளங்கள் எல்லாம் கிடையாது. 2010ல் முகநூல் அறிமுகமானது. எனக்கு கொரியன் டிராமா பிடிக்கும். இடையில் விளம்பரங்கள் வரும். அதில் தான் நான் மைக்ரோபிளேடிங், ஏஸ்தெடிக் குறித்த விளம்பரம் வரும். அதைப் பார்த்துதான் எனக்கு ஏஸ்தெடிக் பற்றி தெரிய வந்தது. மேலும், இது குறித்து நிறைய ஆய்வு செய்து அதற்கான பயிற்சியும் மேற்கொண்டேன். ஏஸ்தெடிக் பொறுத்தவரை சில சிகிச்சைகள் டாக்டரால் மட்டுமே செய்ய முடியும். அந்த சிகிச்சைகளை தவிர மற்ற சிகிச்சைகளை +2 அல்லது பட்டம் பெற்றவர்கள், இல்லத்தரசிகள் போன்றவர்கள் முறையாக பயிற்சி மற்றும் அங்கீகாரம் பெற்று கிளினிக் அமைத்து சிகிச்சை அளிக்கலாம்.
ஏஸ்தெடிக் சிகிச்சையில் மருத்துவர்கள் மட்டுமே செய்யக்கூடிய சிகிச்சை முறைகள் உள்ளன. அதை நாங்க செய்ய மாட்டோம். அதைத் தவிர அனைவரும் செய்யக்கூடிய சிகிச்சை முறைகளை மட்டுமே நாங்க கடைபிடிக்கிறோம். இதற்கு பயிற்சிகளும் அளித்து சொந்தமாக மையம் அமைக்க அனைத்து உதவிகளும் செய்து தருகிறோம்
ஏஸ்தெடிக் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வரப்பிரசாதம். ஒருவரின் முகத்தோற்றத்திற்கு அழகு சேர்ப்பது புருவங்கள். ஆனால், சிலருக்கு புருவங்கள் அடர்த்தியாக இருக்காது. ஒரு சிலருக்கு புருவங்களே இருக்காது. அவர்களுக்கு மைக்ரோபிளேடிங் சிறந்தது. சிலர் என்னை கட்டிப்பிடித்து நன்றி கூறும் போது மனசுக்கு நிறைவா இருக்கும். என்னுடைய சகோதரி சென்னையில் இருந்தாங்க. அவங்க தான் காஸ்மெட்டாலஜி குறித்து சொன்னாங்க. அவங்க சொல்லும் வரை எனக்கு அதுகுறித்து எதுவுமே தெரியாது. நான் பயிற்சி எடுத்த போது, மைக்ரோபிளேடிங் எல்லாம் யாருமே செய்ய மாட்டாங்க. மக்கள் இதை ஏற்பாங்களான்னு பயந்தேன். ஆனால், பயிற்சி எடுத்த போதுதான் எனக்கு தெளிவு கிடைச்சது.அழகுக்கலை மற்றும் ஏஸ்தெடிக் மையம் இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, அழகுக்கலையில் சருமத்தை கண்களால் பார்த்து எந்த வகை சருமம் என்று கண்டறிந்து அதற்கான ஃபேஷியல் செய்வாங்க. அது நம்முடைய சருமத்திற்கு மேல் செய்யப்படும் சிகிச்சை. ஃபேஷியல் முறையில் மசாஜ் செய்யும் போது, ரத்த ஓட்டம் சீராகும், உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால், அது நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. அதுவே ஏஸ்தெடிக் முறையில் லேசர் சிகிச்சை செய்யும் போது அது சருமத்திற்குள் ஊடுருவி சென்று, கொலாஜன் அதிகரித்து, பிக்மென்டேஷன் குறைக்கும். இது லேசர் சிகிச்சை என்பதால் தொடர்ந்து நான்கு, ஐந்து முறை செய்ய வேண்டும். நாளடைவில் சருமத்தில் மாற்றத்தினை பார்க்கலாம். இந்த ஒரு இயந்திரத்தில் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைக்கான தீர்வினை லேசர் மூலம் கொடுக்க முடியும்’’ என்றவர், இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்து சிகிச்சைகளும் செய்து வருவதாக கூறினார்.
‘‘பொதுவாக ஏஸ்தெடிக் சிகிச்சையில் மருத்துவர்கள் மட்டுமே செய்யக்கூடிய சிகிச்சை முறைகள் உள்ளன. அதை நாங்க செய்ய மாட்டோம். அதைத் தவிர அனைவரும் செய்யக்கூடிய சிகிச்சை முறைகளை மட்டுமே நாங்க இங்கு கடைபிடிக்கிறோம். மேலும், இதற்கான பயிற்சிகளும் அளித்து வருகிறோம். பயிற்சி பெற்றவர்கள் சொந்தமாக மையம் அமைக்க தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருகிறோம். பேசிக் மற்றும் அட்வான்ஸ்டு அழகுக் கலை, அட்வான்ஸ்டு அழகியல் பயிற்சி, ஹைட்ரா ஃபேஷியல், ஆக்னி தெரபி, PMU, மைக்ரோபிளேடிங், ஹேர் எக்டென்ஷன்ஸ், நெயில் ஆர்ட் என அனைத்து பயிற்சிகளும் இங்குண்டு. இதனை இல்லத்தரசிகள், அழகுக்கலை நிபுணர்கள், +2 வரை படிச்சவர்களுக்கு என தனிப்பட்ட பயிற்சிகள் உள்ளன. இந்தப் பயிற்சியினை மெற்கொண்டால், மாதம் 5000 ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். குறிப்பாக பெண்கள். ஒருமுறை முதலீடு செய்தால் போதும். அடுத்த நாள் முதல் இருந்தே லாபம் பார்க்கலாம். என்னுடைய மூன்றாவது கிளையில் பயிற்சி அளிப்பதில் அதிக கவனம் செலுத்த இருக்கிறோம்.
தொகுப்பு: ஷன்மதி
