இந்தியாவின் முதல் பெண் தொழில்முறை மல்யுத்த வீராங்கனை!

நன்றி குங்குமம் தோழி

இந்தியாவின் முதல் பெண் தொழில்முறை மல்யுத்த வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் கவிதா டலால். இவர் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்கிறார்.வேர்ல்டு ரெஸ்லிங் என்டெர்டெயின்மென்ட் (World Wrestling Entertainment WWE) நடத்தும் புகழ்பெற்ற மல்யுத்தப் போட்டிகளில் கவிதா தேவி என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பங்கேற்றிருக்கிறார். இந்த வகையான போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னரும் இவர் பல இந்தியப் போட்டிகளில், ‘கவிதா’ மற்றும் ‘ஹார்ட் கேடி’ என்ற பெயர்களில் பங்கெடுத்திருக்கிறார். இப்போது எட்டியிருக்கும் இந்த உயரத்தை அடைய அவர் கடுமையான பயிற்சிகளையும் தொடர் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. தொழில்முறை மல்யுத்த வீராங்கனையாவதற்கான முறையான வழிகாட்டுதல்கள் மிகக் குறைவாக இருந்த காலக்கட்டம் அது.

கவிதா டலால் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் மால்வி என்ற கிராமத்தில் 20.09.1986ல் பிறந்தவர். அந்தக் கிராமத்தின் மக்கள் தொகை வெறும் 6,000 மட்டுமே. பெண் தடகள வீரர்கள் பயிற்சி பெறுவதற்கான எந்தவிதமான உள்கட்டமைப்புகளும் அந்தச் சிறு கிராமத்தில் இல்லை. ஐந்து உடன்பிறப்புக்களில் இவரும் ஒருவர். 2010 ஆம் ஆண்டு திருமணமாகி, ஒரு குழந்தைக்கும் தாயானார். அதன் பிறகு பந்தயங்களில் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்தார். ஆனால், கணவர் கொடுத்த தொடர் ஊக்கத்தால் தொடர்ந்து பந்தயங்களில் ஈடுபட ஆரம்பித்தார். அரசியலிலும் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சௌத் ஏஷியன் கேம்ஸ் (South Asian Games) பந்தயங்களில் இந்தியாவின் சார்பாக 75 கிலோ பிரிவில் கலந்து கொண்டு தங்கம் வென்றார். காலி என்பவர் பஞ்சாப்பில் பயிற்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். கவிதாவிடம் இருக்கும் ஆற்றலை உணர்ந்த காலி, அவருக்கு ஜலந்தரில் இருந்த கான்டினென்டல் ரெஸ்லிங் என்டெர்டெயின்மென்ட் என்ற பயிற்சியகத்தில் தொழில்முறை மல்யுத்த வீரருக்கான தீவிரப் பயிற்சிகளை அளித்தார். பல நுட்பங்களையும் கற்றுக்கொடுத்தார். கவிதா கவனமாகவும், தீவிரமாகவும் கற்றுக்கொண்டார்.

2016 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கவிதா என்ற பெயரில் புல்புல் என்பவருடன் மல்யுத்தம் புரிந்தார். பின்னர் ஹார்ட் கேடி என்ற பெயரில் பந்தயங்களில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, மே யங் கிளாசிக் டோர்னமென்ட் போட்டிகளின் பங்கேற்பாளர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டார். அகில உலக நாடுகளில் இருந்து வந்திருந்த 31 வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். ஆனால், அடுத்த மாதம் நடந்த பந்தயத்தில் டகோடா கை என்பவரிடம் தோற்றுப்போனார்.2017 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் கவிதா ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், அவர்களுடைய பயிற்சி மையத்தில் பயிற்சியை தொடங்குவதாகவும் WWE அறிவித்தது. அந்த நிறுவனத்தின் சார்பில் ரெஸில் மேனியா விமன்’ஸ் பேட்டில் ராயல் (Wrestle Mania Women’s Battle Royal) போட்டிகளில் பங்கெடுத்துக்கொண்டார். 2019 ஆம் ஆண்டு, WWE பந்தயங்களில் கலந்து கொள்ள தகுதியும் திறமையும் உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் அமைப்பு ஒன்றை ஆரம்பித்தார். அவர் கலந்து கொண்ட பந்தயத்தை இணையத்தில் மிக அதிகம் நபர்கள் பார்வையிட்டிருக்கின்றனர். WWE இந்தியாவின் திறமைகளை அங்கீகரித்ததற்கான ஓர் அடையாளமாகவே இது பார்க்கப்பட்டது.

கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வதற்கு, இதற்கு முன்னர் வுஷு என்னும் தற்காப்புக் கலையிலும் மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் கலப்பு தற்காப்புக் கலைகளிலும் அவர் பெற்றிருந்த பயிற்சியே காரணம். பளு தூக்குவதிலும் பெயர் பெற்றவராக இருந்தார். 2007 ஆம் ஆண்டு வரை தேசிய சீனியர் பளு தூக்கும் போட்டி உட்பட பல போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். இவர் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் எல்லைப் பாதுகாப்புப் படையில் காவலராகவும் பணிபுரிந்திருக்கிறார். சவால்கள் நிரம்பிய பணி அது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வாலிபால் வீரரான கௌரவ் டோமர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். தம்முடைய விளையாட்டுத் தொடர்பான செயல்பாடுகளுக்கு கணவர் மிகவும் ஒத்துழைப்பு தருவதாக கவிதா கூறியுள்ளார். கவிதாவின் வெற்றிப் பயணம் சிறக்க வாழ்த்துகள்!

தொகுப்பு:லதானந்த்

Related Stories: