செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

செல்லப்பிராணிகள் என்றால் நாய் மற்றும் பூனை தான் நம்முடைய நினைவில் வரும். ஆனால், இன்று செல்லப்பிராணிகள் என்றால் ஆப்ரிக்கன் கிளியில் ஆரம்பித்து எக்சாட்டிக் பிராணிகளான பால் பைத்தான், சுகர் கிளைடர், கின்னி பிக், முள்ளம்பன்றி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்தப் பட்டியல் ஒருபுறம் இருந்தாலும், யுனிவர்சலாக நாய் மற்றும் பூனையினைதான் இன்றும் பலர் தங்கள் வீட்டில் வளர்க்க விரும்புகிறார்கள். இவைகளை வளர்ப்பது ஒருபுறம் இருந்தாலும், அவைகள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தில் கவனம் கொண்டு அவைகளுக்கான சத்து நிறைந்த ஆரோக்கிய உணவுகளை ‘ரைட்4பாஸ்’ என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள் நண்பர்களான தனு ராய் மற்றும் சமீர் அச்சன்.

‘‘நானும் தனுவும் கல்லூரி நண்பர்கள். MBA படிக்கும் போதுதான் எங்க இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. படிப்பு முடித்த பிறகு நான் நிதித் துறையில் வேலைக்கு சேர்ந்தேன். தனு வங்கி வேலைக்கு சென்றுவிட்டார்’’ என்று பேசத் துவங்கினார் சமீர் அச்சன்.

‘‘சில காலம் நிதித் துறையில் வேலை பார்த்தேன். பிறகு அதில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு தனிப்பட்ட முறையில் நிதி ஆலோசனை வழங்கி வந்தேன். தனு 20 வருடம் வங்கியில் வேலை பார்த்தார். அதன் பிறகு வேலையை ராஜினாமா செய்தவருக்கு, வங்கி சார்ந்து இல்லாமல் வேறு துறையில் தொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அவருக்கு சின்ன வயதில் இருந்தே செல்லப்பிராணிகள் மேல் தனிப்பட்ட பிரியம் உண்டு. அவர் வளர்த்தும் வந்தார். அதனால் ஒரு நாயின் குணம், மனநிலை, பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுப் பழக்கங்கள் என அனைத்தும் அவருக்கு அத்துப்படி. பலமுறை அவர் என்னிடம் கூறியுள்ளார், ‘எனக்கு வங்கி வேலையில் உள்ள அனுபவத்தை விட செல்லப்பிராணிகள் பற்றிய அனுபவம்தான் அதிகம். அதனால் இவைகள் சார்ந்து ஏதாவது தொழில் செய்ய வேண்டும்’ என்று என்னிடம் கூறுவார். எனக்கும் செல்லப்பிராணிகள் பிடிக்கும். நானும் நாய் வளர்த்து வருகிறேன். அதனால் அவரின் யோசனை எனக்கும் சரியாக பட்டது. ஆனால், எங்கு எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. அதற்கான ஆய்வில் ஈடுபட ஆரம்பித்தோம். அப்படித்தான் 2022ல் செல்லப்பிராணிகளின் உணவினை ‘ரைட்4பாஸ்’ என்ற பெயரில் அறிமுகம் செய்தோம். ஆனால், நாங்க எதிர்பார்த்த அளவு மார்க்கெட் நிலவரம் அமையவில்லை. அதனால் மறு ஆய்வு செய்து சில மாற்றங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்தோம். கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவினை அளித்து வருகிறார்கள்’’ என்றவரை தொடர்ந்தார் தனு ராய்.

‘‘சாப்பாடு நம்பிக்கையின் அடையா ளம். அதன் முழுப் பொறுப்பினை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். செல்லப்பிராணிகள் நம் வீட்டின் குழந்தைகள். அவர்களுக்கு தவறான உணவினை கொடுக்க முடியாது. அதனால் ஒவ்வொரு உணவு தயாரிப்பிலும் மிகவும் கவனமாக இருந்தோம். காரணம், செல்லப்பிராணிகளுக்கான உணவு தயாரிக்கும் முறையே வித்தியாசமானது. அவர்களின் ஒவ்வொரு உணவிலும் தேவையான ஊட்டச்சத்து நிறைந்திருக்க வேண்டும். அவை எந்தெந்த உணவில் உள்ளது, அதனை எந்த வடிவில் கொடுக்கலாம் என்று தீவிர ஆய்வுக்குப் பிறகுதான் ஒவ்வொரு உணவாக நாங்க அறிமுகம் செய்ய துவங்கினோம். கொழுப்பு, புரதம் உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும். விட்டமின்கள், மினரல்கள் உடல் இயங்க உதவும். இவற்றுடன் கார்போஹைட்ரேட் சேர்க்கும் போது அது முழுமையான உணவாக இருக்கும். மனிதர்கள் மட்டுமில்லை… செல்லப்பிராணிகளுக்கும் செரிமான அமைப்பு மாறுபடும். பொதுவாக நாய், பூனைகளுக்கு தயிர் சாதம் கொடுப்பது வழக்கம். அதில் உள்ள சத்து அவைகளுக்கு கிடைக்கும் என்றாலும், ஆரோக்கியமாக இருக்க தேவையான ஊட்டச்சத்தும் அவசியம். நாய்களுக்கு செரிமான அமைப்பு சிறியதாக இருந்தாலும், புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் அதிகம் தேவைப்படும். காரணம், முன்பு நாய்களை நாம் வேட்டைக்காகத்தான் பயன்படுத்தி வந்தோம். ஆனால், இன்று வீட்டில் நம்மில் ஒருவராகத்தான் செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. கிட்டத்தட்ட குழந்தைகள் போல்தான் நம் வீட்டில் வலம் வருகின்றன. அது தவறில்லை. அதே சமயம் அவைகளுக்கு தேவையான பயிற்சிகள் கொடுப்பது அவசியம். அப்போது தான் அவை மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்றவர், செல்லப்பிராணிகளுக்கும் சமச்சீரான உணவு மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

‘‘மனிதர்கள் போல் செல்லப்பிராணிகளுக்கும் உணவு முக்கியம் என்பதால் அதனை சத்துள்ளதாக கொடுக்க விரும்பினோம்’’ என்று தங்களின் உணவுகள் குறித்து பேசத் துவங்கினார் சமீர். ‘‘கடைகளில் பல உணவுகள் விற்பனையில் கிடைக்கிறது. ஆனால், நாங்க தயாரிக்கும் உணவு முழுக்க முழுக்க இயற்கையான முறையில் சத்துக்கள் குறையாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். அதாவது, சிக்கன் சேர்க்கப்படும் உணவில் சிக்கன் மட்டும்தான் இருக்கும். இதனால் செல்லப்பிராணிகளின் செரிமான அமைப்பு எந்த வகையிலும் பாதிக்காது. மேலும், மனிதர்கள் நாம் சாப்பிடக்கூடிய அனைத்து உணவுகளையும் நாய்களுக்கு கொடுக்கக் கூடாது. அதே சமயம் உடல் நிலை சரியில்லாத போது மருத்துவரின் ஆலோசனை பேரில்தான் உணவினை வழங்க வேண்டும். எங்களின் உணவு சமச்சீரான உணவு என்பதால், எந்த வித பாதிப்பினையும் ஏற்படுத்தாது. இதில் செல்லப்பிராணிகள் சாப்பிடக்கூடிய சிக்கன், மீன், முட்டை, மீன் எண்ணெய் மற்றும் காய்கறி, பழங்கள் என அனைத்தும் உணவில் சேர்க்கப்பட்டிருக்கும். இதனை தினசரி உணவாகவே கொடுக்கலாம். மேலும், டிரீட்ஸ் என்று சொல்லக்கூடிய உணவுகளும் உள்ளன.

நானும் சரி தனுவும் சரி இருவரும் செல்லப்பிராணிகள் பிரியர்கள். சிறு வயதில் இருந்தே நாய்களை வளர்த்து வருகிறோம். அதனால் அவற்றின் தேவை, உணவுப்பழக்கம், மனநிலை என அனைத்தும் தெரியும். இந்த அனுபம்தான் ஒரு தரமான உணவினை தயாரிக்க உதவியிருக்கிறது. நம்முடன் வாழும் ஜீவன்களுக்கு ஆரோக்கியமான உணவினை கொடுப்பது செல்லப்பிராணிகளை வளர்ப்பவரின் கடமை. நாங்க சொல்ல விரும்புவது ஒன்று தான். உங்களால் செல்லப்பிராணிகளை கவனமாக வளர்க்க முடியவில்லை என்றால் வளர்க்காதீர்கள். சாப்பாடு மட்டும் முக்கியமில்லை, அவற்றுடன் நேரம் செலவு செய்யவும் வேண்டும். அதுதான் ஆரோக்கியமான வளர்ப்பு முறை. அவர்களுக்கான பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு குழந்தையை பராமரிப்பது போல் பேணிக் காக்க வேண்டும். இவை செய்ய முடியாதவர்கள் அழகுக்காக செல்லப்பிராணிகளை வளர்க்காதீர்கள். எங்களின் உணவினை ‘ரைட்4பாஸ்’ என்ற இணையத்தில் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். இதனை பெட் ஸ்டோரிலும் விற்பனை செய்ய இருக்கிறோம். மேலும், சில உணவுகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர் நண்பர்களான சமீர் மற்றும் தனு ராய்.

தொகுப்பு: ஷம்ரிதி

Related Stories: