நன்றி குங்குமம் தோழி
நன்றாக படித்தால் நல்ல வேலைக்குச் செல்ல முடியும், கை நிறைய சம்பாதிக்கவும் செய்யலாம். ஆனால், இன்று பலர் பொறியியல் படித்திருப்பார்கள். அவர்களுக்கு வேறு துறையில் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். சில காலம் படித்த துறை சார்ந்த வேலையில் ஈடுபட்டாலும், ஒரு கட்டத்திற்குப் பிறகு தங்களுக்கு பிடித்த வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள். அதில் ஒரு சந்தோஷம் மற்றும் ஆத்மதிருப்தி கிடைக்கிறது என்கிறார் நீலா கிருஷ்ணன்.
‘‘நானும் எல்லோரையும் போல் பட்டப்படிப்பு முடித்தேன். பிறகு வேலைக்கும் சென்றேன். சில ஆண்டுகள் கழித்து எனக்கு இந்த வேலை வேண்டாம்… முழுமையாக இயற்கை விவசாயத்தில் இறங்கிடலாம் என்று தோன்றியது. அதனால் வேலையை துறந்தேன். முழுமையாக என்னை விவசாயத்தில் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தேன்’’ என்று பேசத் துவங்கிய நீலா, கீரை சாகுபடியில் பல சாதனைகளை படைத்துள்ளார். ‘வானகா பசுமையகம்’ என்ற பெயரில் 60 வகையான கீரைகள், நாட்டுக் காய்கறிகள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், காய்கறி வத்தல், மரபு தின்பண்டங்கள், மூலிகை வலி நிவாரண தைலம் மற்றும் 120 வகையான நாட்டு மரபு விதைகள் விற்பனை செய்து வருகிறார். மேலும், வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம், இயற்கை விவசாயம், மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரித்தல் குறித்து பயிற்சிகளும் அளித்து வருகிறார். ‘‘எனக்கு சிறு வயதிலிருந்து மூலிகைகள் மீது மிகுந்த ஆர்வம். அதனால் நான் வேதியியல் துறையை தேர்வு செய்து படித்தேன். பின்னர் ஒரு மருத்துவ நிறுவனத்தில் ஆய்வகத்தில் ஆயுர்வேத தரக்கட்டுப்பாடு ஆய்வு துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தேன்.திருமணத்திற்குப் பின்னர் குழந்தைகளுக்காக வேலையை விட நேர்ந்தது. வேலை பார்த்த எனக்கு வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. அதனால் பொழுதுபோக்கிற்காக எங்க வீட்டு மாடியில் தோட்டம் ஒன்றை அமைத்தேன். அப்போது கொரோனா காலம் என்பதால் முழு ஆர்வத்துடன் நான் தோட்ட வேலையில் ஈடுபட்டேன். என்னுடைய ஆர்வத்தை புரிந்து கொண்ட என் நண்பர்கள், பல்வேறு மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகளிடம் இருந்து எனக்கு நாட்டுக் காய்கறி விதைகளை வாங்கி கொடுத்தார்கள். அதைப் பார்த்ததும் முழு நேரமாக விவசாயம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் எழுந்தது.
பெண்கள் வீட்டிலிருந்து தொழில் செய்ய நினைத்தால் நல்ல சத்தான, கலப்படமில்லாத உணவுகளை கையில் எடுத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
என்னிடம் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட நாட்டுக் காய்கறிகளின் விதைகள் இருந்ததால், அதனை பயிரிட்டோம். அதில் கீரையும் பயிரிட செய்தேன். எங்க வீட்டு பயன்பாட்டிற்கு உதவியது. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையினை எங்களின் உணவில் சேர்த்துக் கொள்ள முடிந்தது. சில சமயம் அந்தக் கீரைகள் கை வைத்தியமாகவும் பலன் அளித்தது. சொல்லப்போனால் ஆரோக்கியமான வாழ்வினை நாங்க வாழத் துவங்கினோம். உடலும் ஆரோக்கியமாக இருந்ததால், மருத்துவமனை செல்வதும் குறைந்தது’’ என்றவர், மூலிகை கீரைகளையும் சமைத்து சாப்பிடலாம் என்று குறிப்பிட்டார்.‘‘பொதுவாக குறிப்பிட்ட சில வகை கீரைகளைதான் நாம் சாப்பிட்டு பழக்கி இருக்கிறோம். ஆனால், நம் முன்னோர்கள் களை செடிகள் என்று கூறப்படும் பல மூலிகை கீரைகளை சமைத்துச் சாப்பிட்டுள்ளனர். அதனால்தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். மேலும், அவர்கள் சமைக்கும் முறைகளும், உடலிலுள்ள நோய் தீர்க்கவும், நோயில்லாமல் வாழவும் பழகிக் கொண்டார்கள்.
வல்லாரை, எலும்பொட்டி, முடக்கத்தான், தவசிக்கீரை, கல்யாண முருங்கை, சண்டிகீரை, சிலோன் பசலை, தரை பசலை என 60க்கும் மேற்பட்ட மூலிகை கீரைகள் உள்ளன. நாங்க கீரை வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அப்படியே பறித்து தருகிறோம். சில சமயம் விளைச்சல் நிறைய இருக்கும் போது அதை காய வைத்து பொடியாக அரைத்து கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறோம். பொடியாக மட்டுமில்லாமல், தின்பண்டங்கள், ஜாம், தொக்கு, தேநீர், சூப் வகைகளாகவும் செய்கிறோம். அதேபோல் காய்கறிகளையும் மதிப்புக்கூட்டி கொத்தவரை, சுண்டைக்காய், காராமணி, கத்தரிக்காய், வெண்டைக்காய் எனவும் சிறுதானியங்களுடன் பாரம்பரிய அரிசி சேர்த்து கூழ்வடகம், கறிவேப்பிலை, வல்லாரை, முருங்கை போன்ற வடகம் செய்து தருகிறோம்.
இன்றைய தலைமுறையினர் பலருக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு இல்லை. அதனால், ஒவ்வொரு வார இறுதியில் ‘வீக் எண்ட் விவசாயம்’ மூன்று மணி நேர நிகழ்வை இலவசமாக நடத்தி வருகிறோம். இது முழுக்க முழுக்க களப் பணி சார்ந்தது. பெண்கள், ஆண்கள், மாணவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம், இயற்கை விவசாயம், மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிப்பு குறித்த பயிற்சியும் அளிக்கிறோம். எங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. ஆனால், விவசாயம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால், நிலங்களை வாடகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வருகிறேன். இதனால் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியவில்லை. கூடிய விரைவில் மாம்பாக்கம், கண்டிகை அருகே சொந்தமாக நிலம் வாங்க இருக்கிறோம். அதில் ஒருங்கிணைந்த பண்ணை வைக்க வேண்டும் என்பது எனது கனவு.
பெண்கள் வீட்டிலிருந்து தொழில் செய்ய நினைத்தால் குறிப்பாக உணவு சார்ந்த தொழில் செய்ய விரும்பினால் நல்ல சத்தான, கலப்படமில்லாத உணவுகளை கையில் எடுத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நான் பொழுதுப் போக்கிற்காகத்தான் மாடித்தோட்டம் தொடங்கினேன். இன்று நிலத்தினை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். நம்முடைய மரபு வகை காய்கறிகளை இயற்கை முறையில் விவசாயம் செய்வதுதான் முக்கிய காரணம்’’ என்ற நீலா கிருஷ்ணன் பல விருதுகளை பெற்றுள்ளார்.
தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்
