இனிமையான முதுமை

நன்றி குங்குமம் தோழி

இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டிற்குள், 100-க்கு 20 பேர் முதியவர்களாக இருப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதனால், ‘முதியோர்களை வீட்டில் வைத்து பராமரிப்பதா அல்லது முதியோருக்கு உதவப்படும் வாழ்விட வளாகங்களுக்கு (Assisted Living) அனுப்புவதா?’ என்ற கேள்வி பல குடும்பங்களில் எழுந்துள்ளது என்கிறார் முதியோர் நல மருத்துவர் வசந்த் கார்த்திகேயன்.

முன்பெல்லாம் முதியோர்கள் தங்கள் குழந்தைகள், பேரக் குழந்தைகளோடு வீட்டிலேயே வாழ்வது கலாச்சாரமாக இருந்தது. ஆனால், வேலைக்காக வெளியூர் செல்லுதல், தனிக் குடும்பங்கள் அதிகரித்தல் மற்றும் வேலைப்பளு போன்ற காரணங்களால் இந்த நிலைமை இப்போது மாறி வருகிறது. முதியோர்களை வீட்டில் பராமரிப்பதற்கும், முதியோர் இல்லங்களில் சேர்ப்பதற்கும் அதற்கான நன்மைகளும் சிரமங்களும் உள்ளன. இப்போது இந்த முடிவு வெறும் உணர்வுப்பூர்வமானது மட்டுமல்ல… நடைமுறை சாத்தியங்கள் மற்றும் உடல்நலம் சார்ந்த முடிவாகவும் இது பார்க்கப்படுகிறது.

வீட்டுச் சூழலில் வாழும் போது அது முதியோர்களுக்கு மன அமைதியை தரும். பதற்றத்தைக் குறைக்கும். குறிப்பாக, ஞாபக மறதி (Dementia) உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. இருப்பினும், வீட்டில் முதியவர்களை பராமரிப்பது என்பது கொஞ்சம் சவால்கள் நிறைந்ததுதான். வயதாகும் போது, அவர்களின் மருத்துவத் தேவைகள் மிகவும் சிக்கலாக மாறக்கூடும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலி, இதய நோய்கள் போன்ற நாள்பட்ட நோய்கள் இருந்தால் தொடர் கண்காணிப்பு அவசியம். மேலும், சரியான நேரத்திற்கு மருந்துகளை கொடுக்க வேண்டும். மருத்துவ நிபுணர்களின் உதவியும் தேவைப்படும். பல வீடுகளில், முதியோர்களை தொடர்ந்து பராமரிக்கக் குடும்ப உறுப்பினர்களுக்கு நேரம், முறையான பயிற்சி அல்லது அதற்கான வசதிகள் இல்லாமல் போகலாம்.

பாதுகாப்பு என்பது மற்றொரு முக்கியமான பிரச்னை. குறைந்துவிட்ட நடமாட்டம், பார்வைத்திறன் குறைவு, தடுமாற்றம் போன்ற வயது முதிர்வால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்கும் வகையில் நம்முடைய வீடுகள் வடிவமைக்கப்படுவதில்லை. முதியோர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு முக்கியக் காரணம் கீழே விழுவதுதான். சிறிய விபத்துகள் கூட, கடுமையான விளைவுகளை முதியோர்களுக்கு ஏற்படுத்தி விடும். இந்தியாவின் நகர்ப்புறங்களில் வீட்டில் வைத்து முதியோர்களை பராமரிக்கும் சேவைகள் துறை விரிவடைந்துள்ள போதிலும், நம்பகமான மற்றும் பயிற்சி பெற்ற பராமரிப்பு பணியாளர்களை பெறுவதில் இன்னும் சிக்கல்கள் இருக்கின்றன. வேலைக்கு சென்று கொண்டு முதியோர்களையும் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு, உடல் மற்றும் உணர்வு ரீதியான சுமையையும், அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

ஒரு காலத்தில் தயக்கத்தோடு பார்க்கப்பட்ட வாழ்விட வளாக வசதிகள் இப்போது படிப்படியாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அன்றாடச் செயல்களுக்கு உதவி தேவைப்படும். ஆனால், தீவிரமான மருத்துவப் பராமரிப்புத் தேவையில்லாத முதியோர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த இல்லங்கள் வடிவமைக்கப்படுகின்றன. முறையான ஆதரவு கிடைப்பதே வாழ்விட வளாகங்களில் கிடைக்கும் முதன்மை நன்மைகளில் ஒன்றாகும். அங்குள்ள முதியோர்களுக்குப் பயிற்சி பெற்ற பராமரிப்பாளர்களின் ஆதரவு, உடல்நலக் கண்காணிப்பு, சத்தான உணவு மற்றும் அவசர மருத்துவ உதவிகள் அனைத்தும் கிடைக்கின்றன. உடன் வசிக்கும் சக நபர்களோடு கலந்துரையாடுவதன் மூலம் தனிமையில் இல்லாமல் சமூக தொடர்பு ஏற்படுகிறது. பிள்ளைகள் வேறு நகரங்களிலோ அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் போது இவர்கள் தனிமையில் வசிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தனிமையை வாழ்விட வளாகங்கள் போக்க உதவுகிறது. மேலும், அங்குள்ள பொழுதுபோக்கு அம்சங்கள் சமூகமாக இணைந்து இருக்க வாய்ப்புகளை வழங்குகின்றன.

இந்த வளாகங்கள் அவர்களை பராமரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், சுறுசுறுப்பாக செயல்படவும், சக நபர்களுடன் தோழமையோடு இணைந்திருக்கவும் ஊக்கப்படுத்துகின்றன. இந்த வசதிகள் இருந்தாலும், தன்னுடைய வீட்டை விட்டு அங்கு அவர்கள் வசிக்க செல்வது, ஒரு சவாலான முடிவு என்றுதான் சொல்ல வேண்டும். பெற்றோரை உடன் இருந்து பார்த்துக் கொள்ள முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி, சமூகம் என்ன நினைக்கும் என்ற பயம் மற்றும் அங்கு வழங்கப்படும் கவனிப்பு, அக்கறையின் தரம் குறித்த கவலைகள்… இவை அனைத்தும் பிள்ளைகளுக்குள் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தும். தரமான வாழ்விட வளாகங்களில் கட்டணங்களும் அதிகம் என்பது ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது.

அன்பு மற்றும் நல்லெண்ணம் மட்டும் முதியோர்களின் பராமரிப்புக்குப் போதாது. சரியான நேரத்தில் மருத்துவ உதவியும் அவசியம். பெரும்பாலும் முதியோர்களை பராமரிக்கும் பொறுப்பினை பெண்களே சுமக்கின்றனர். காலப்போக்கில், அவர்களுக்கு சோர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். வாழ்விட வளாகங்கள் இந்தப் பொறுப்பை பகிர்ந்து கொள்வதால், இரு தரப்பினருக்கும் நிம்மதி கிடைக்கிறது. மருத்துவ உதவி அதிகம் தேவைப்படும் காலத்தில், பிள்ளைகள் உடன் இல்லாத பட்சத்தில் இவை அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். இந்த மாற்றத்தில் தொழில்நுட்பமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. டெலிமெடிசின்(தொலைதூர மருத்துவம்), நோயாளிகளை கண்காணிக்கும் கருவிகள் மற்றும் அவசரகால உதவிக் கட்டமைப்பு ஆகியவை அதிக திறன் மிக்கதாக மாற்றியுள்ளன. இதன் மூலம் ஒருவரைப் பற்றிய தகவல் அறிந்து, உடனடியாக முடிவுகளை எடுக்க உதவுகிறது.

முதியோர்களின் பராமரிப்பை பொறுத்தவரை, அனைவருக்கும் பொருந்தக்கூடிய தீர்வு என்று எதுவுமில்லை. அவர்கள் வீட்டில் இருப்பதும், வாழ்விட வளாகங்களில் சேர்ப்பதும் அவரவரின் உடல்நலம், சுதந்திரமாகச் செயல்படும் திறன், நிதி நிலைமை மற்றும் குடும்பத்தின் ஆதரவு போன்றவற்றை சார்ந்தே அமையும். சில சந்தர்ப்பங்களில், இரண்டும் கலந்த ஒரு கலவையான அணுகுமுறை பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, தொழில்முறை பராமரிப்பாளர்களின் உதவி, அவ்வப்போது மருத்துவச் சோதனைகள் மற்றும் வீடுகளில் தேவையான மாற்றங்கள் ஆகியவற்றுடன் முதியவர்கள் தொடர்ந்து தங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து வீட்டிலேயே வசிக்கலாம். அதே சமயம் சந்தர்ப்ப சூழல் காரணமாக வாழ்விட வளாகங்களுக்கு மாறுவது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தவும், உடல்நல அபாயங்களை குறைக்கவும் உதவும். நெருக்கடி ஏற்படும் நேரத்தில் முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து குடும்பத்தினர் முன்னதாகவே கலந்துரையாட வேண்டும்.

முதியோர்களை பராமரிப்பது ‘கடமை’ என்ற நிலையிலிருந்து, அவர்களுக்குக் ‘கண்ணியமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது’ என்ற நிலைக்கு மாறியுள்ளோம். வீடோ, வாழ்விட வளாகங்களோ, அவர்கள் அங்கு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதே நமது இறுதி நோக்கமாக இருக்க வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. முதுமையை மிகவும் யதார்த்தமான அணுகுமுறையுடன் ஏற்றுக்கொள்ள நாம் தொடங்கிவிட்டோம். இந்த அணுகுமுறை பாரம்பரியத்தை மதிப்பதோடு, நவீனகால யதார்த்த நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளவும் குடும்பங்களுக்கு உதவுகிறது’’ என்று ஆலோசனை வழங்கினார் முதியோர் நல மருத்துவர் வசந்த் கார்த்திகேயன்.

தொகுப்பு: நிஷா

 

Related Stories: