நன்றி குங்குமம் தோழி
குழந்தைகள் ஓரிரு மாதங்கள் மட்டுமே தன் விளையாட்டுப் பொம்மைகள் மீது ஆர்வமாக இருப்பார்கள். பிறகு வீட்டிலுள்ள பொருட்களின் மேல்தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகமாகும். இது ஏதோ நம் வீட்டில் மட்டும் நடப்பதில்லை. உலகம் முழுக்க உள்ள எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரிதான் வளர்வார்கள். இது இயற்கையான வளர்ச்சிகளில் ஒன்று. ஏனென்றால், குழந்தைகளுக்கு இயற்கையாகவே புதுப்புது பொருட்களை என்னவென்று ஆராய்ந்து பார்ப்பதற்கு ஆர்வம் இருக்கும். அதில் அவர்களின் மூளையும் வளர்ச்சிப் பெறுகிறது. இவ்வகை பொருட்களை வைத்தே விளையாடும் முறைகள் இயன்முறை மருத்துவத்தில் இருக்கிறது. இதன் வழியாக ‘செயல்பாட்டு முதிர்ச்சியை’ (Development) நாம் குழந்தைகளுக்குக் கொடுக்க முடிகிறது. இந்நிலையில், இதில் வேறு என்னென்ன பயன்கள் இருக்கிறது? ஏன் இதனை அவசியம் நாம் செய்ய வேண்டும் முதலான பலவற்றை இங்கே தெரிந்துகொள்வோம்.
ப்ரெய்ன் ஜிம்…
உடலுக்கு வேலை கொடுக்கும் வகையிலும், அமர்ந்த இடத்தில் இருந்து மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலும், தன் ஐந்து புலன்களுக்கு வேலை கொடுக்கும் வகையிலும் இருக்கும் விளையாட்டுகளை விளையாடுவதே ப்ரெய்ன் ஜிம் (Brain Gym) என்று மருத்துவத்தில் கூறுவார்கள். இந்த மூன்று வகை விளையாட்டுகளையும் குழந்தைகள் விளையாடும்போது அவர்களின் நரம்பியல் இணைப்புகள் பலம் பெறுகிறது.
மூளையில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தனித்துவமான வேலைகள் இருக்கிறது என்பதால், ஒவ்வொரு இடத்திற்குமான நியூரான்கள் இணையும்போதும் ஒவ்வொரு மூளைப் பகுதியும் வலுப்பெறுகிறது. இதனால் அதற்கான செயலில் நாம் ஈடுபடும்போது அதனை செவ்வனே செய்து முடிக்க முடிகிறது. உதாரணமாக, நாம் எழுதும் பகுதியை இவ்விளையாட்டுகளின் மூலம் தூண்டி விடுவதால் ஒரு குழந்தையால் எளிதாக எழுத முடிகிறது. இந்த விளையாட்டுகளினால் மூளையை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க முடியும்.
விளையும் நன்மைகள்…
* குழந்தையின் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.
* குழந்தைகளுக்கே இயல்பாக இருக்கும் டெம்பர் அண்ட் டான்ட்ரம்ஸ் (Temper & Tantrums) என்று சொல்லப்படும் அவ்வப்போது வரும் கோவங்கள், அழுவது, அடம்பிடிப்பது போன்றவற்றை குறைக்கலாம்.
* மேலும், குழந்தையின் ‘மூளை ஒருங்கிணைப்புத் திறன்’ (Brain Cordination) அதிகரிக்கும். உதாரணமாக, எளிமையாக மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொள்வது. மிதிவண்டி ஓட்டுவது கை, கால், மூளை, கண், காது என ஒரே நேரத்தில் பல வேலைகளை ஒன்றாக செய்யும் விஷயம்.
* குழந்தையின் ‘பிரச்னையை தீர்க்கும் திறன்’ (Problem solving skills) அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் எளிதாக மனதினை வருத்திக்கொள்ளாமல் வரும் சிக்கல்களை கடந்து வருவர்.
* ஐம்புலன்களையும் இவ்வகை விளையாட்டின் வழியாக நாம் தூண்டி விடுவதனால் மூளை வளர்ச்சி இன்னும் மேன்மை அடைகிறது. நாம் விலங்குகளாக இருந்தபோதிலிருந்து நம் ஐம்புலன்களின் வழியாகத்தான் இந்த உலகை முதன் முதலாக உணர்கிறோம். எனவே, நம் ஒட்டுமொத்த வாழ்க்கையின் சூட்சுமங்கள் அனைத்தும் இந்த ஐம்புலன்களில் அடங்கி இருக்கிறது என்பதனால், அதனை ஒழுங்காக நாம் சரிவர ஒழுங்கு முறைக்கு கொண்டு வரும்போது நமக்கு எல்லா வேலைகளும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எளிமையாக மாறுகிறது.
* மூளையின் இரு பக்கமான வலப்புறம் மற்றும் இடப்புறம் மூளையை ஒரே நேரத்தில் தூண்டும்போது நியூரான் இணைப்புகள் வலுப்பெறுகிறது.
* இது மட்டும் இல்லாமல் விளையாட்டு வழியாக நாம் குழந்தைகளின் ஆற்றலை (Energy) கரைக்கும்போது அவர்கள் எளிதில் அயற்சி ஆகி விடுவார்கள். இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் செய்ய வேண்டிய வேலைகளை பொறுப்புடன் அடம்பிடிக்காமல் செய்வார்கள். இதனால் சொல் பேச்சைக் கேட்கும் குழந்தைகளாகவும் இருப்பார்கள்.
* குழந்தைகள் முடிவெட்ட அழுவதோ, கால் முன்விரல்களில் நடப்பது போன்றவை அசாதாரண விஷயம் (Disorder). இதுபோன்ற ஐம்புலன்கள் சார்ந்த சிக்கல்களில் இருந்து எளிதில் மீளலாம்.
* உறக்கம், உண்பது போன்ற அடிப்படையான விஷயங்கள் எப்போதும் குழந்தைகளுக்கு சிரமமாகவே
இருக்கிறது. இவ்வாறான தினசரி விஷயங்களில் எளிதாகக் குழந்தையை கொண்டு வரலாம்.
தடுக்கப்படும் சிக்கல்கள்…
* குழந்தைகள் தொலைபேசி, தொலைக்காட்சி போன்றவைக்கு அடிமையாக ஆகாமல் இருப்பர்.
* குழந்தைகள் பள்ளிகளில் எளிமையாகக் கற்க சிரமப்படுவதை தடுக்க முடியும்.
* குழந்தைகள் சோம்பேறியாக, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.
* ஏ.டி.எச்.டி. அதாவது, ‘அதிக துறுதுறுப்புடன்’ இருக்கும் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும்.
* தேவையில்லாமல் அதிகமாக தின்பண்டங்கள் உண்பதை குறைக்க முடியும்.
* ஐம்புலன்கள் சார்ந்த சிக்கல்களில் (Sensory Processing Disorders) இருந்து எளிதில் மீள முடியும்.
விளையாட்டுகள்…
இவ்வகை விளையாட்டுகளின் உதாரணமாக கீழே ஐந்து விளையாட்டுகளை பரிந்துரைக்கிறேன். இதனை அவரவர் குழந்தைகளின் வயதிற்கேற்ப நாம் செய்து பார்க்கலாம்.
* செல்லோ டேப்பினை எடுத்து குழந்தையின் ஒரு கையில் சுற்றி விடலாம். கால்களிலும் சுற்றி விடலாம். இதனை குழந்தை ஒரு கையால் எடுக்க வேண்டும். இப்படி செய்யும்போது குழந்தையின் கவனம் முழுவதும் டேப்பினை எடுப்பதில் இருக்கும். மேலும், டேப்பினில் உள்ள பிசுபிசுப்புத் தன்மை குழந்தைக்கு பழக்கமாகும் என்பதால், அவர்கள் எளிதாக பிசுபிசுவென இருக்கும் உணவுகளை சாப்பிடுவார்கள். உதாரணமாக, சில குழந்தைகளுக்கு எப்போதும் பருப்பு சோறு போன்ற குழகுழப்பான, பிசுப்பிசு உணவுகள் பிடிக்காது. இப்படிச் செய்வதால் குழந்தைகள் எளிதில் இவ்வகை உணவுகளுக்கு பழக்கமாகிறார்கள்.
* மணிகளை கோர்க்கச் சொல்லலாம். கடைகளில் இப்போது எளிதாகக் கிடைக்கும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களில் ஒன்றுதான் இந்த பிளாஸ்டிக் மணிகள். ஒரு கயிற்றில் ஒவ்வொன்றாகக் கோர்க்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது அவர்களின் கவனம் ஒரே இடத்தில் குவிகிறது. இரு கைகள், கண், மூளை என எல்லாம் ஒரே நேரத்தில் வேலை செய்வதால் அவர்களின் ஒருங்கிணைப்புத் திறன் அதிகரிக்கும்.
* வரிசையாக ஐந்து முதல் ஆறு தலையணைகளை தரையில் ஒன்றன் பின் ஒன்றாக வைத்து, அதன் மேல் நடக்கச் சொல்லலாம். இப்படி செய்யும்போது அவர்களின் ஒருங்கிணைப்புத் திறன், ஸ்திரத்தன்மை (Balance) அதிகரிக்கும்.
* தரையில் சில விளையாட்டுப் பொருட்களை போட்டுவிட்டு குழந்தையை நின்று கொண்டே ஒவ்வொன்றாக அந்தப் பொருட்களை எடுக்கச் சொல்லலாம். இப்படி செய்யும் போது அவர்களின் ஒருங்கிணைப்புத் திறன் அதிகரிப்பதோடு அவர்களின் கவனமும் அதில் சேரும்.
* வீட்டில் உள்ள நாற்காலி, மேசை போன்ற பல தளவாடங்களை ஒன்றின் பின் ஒன்றாக அடுக்கி அதில் கைகள் ஊன்றி தவழ்வது போல முதலில் இருந்து கடைசி வரை செய்யச் சொல்லலாம். இப்படிச் செய்வதன் மூலம் கை மற்றும் கால்களில் உள்ள மூட்டுகளில் இருந்து சமிக்கைகள் மூளைக்குச் சென்று நுண்ணறிவுகளை ஒருங்கிணைக்கிறது.
இயன்முறை மருத்துவம்…
ஆட்டிசம் (Autism), ஏ.டி.எச்.டி.(ADHD), டவுன்ஸ் சிண்ட்ரோம் (Down Syndrome), ஐம்புலன் ஒருங்கிணைப்புச் சிக்கல் (Sensory Processing Disorders) போன்ற சிக்கல்கள் உள்ள சிறுவர்களுக்கு இவ்வகை விளையாட்டுகளை வழங்குவதினால் அவர்களின் தினசரி வாழ்க்கையை மேன்மைப்படுத்த முடிகிறது. அவர்களால் கவனம் செலுத்த முடிகிறது. அவர்களை தினசரி சவால்களுக்கு சுயமாகக் கட்டுப்படுத்தி வேலை செய்ய வைக்க முடிகிறது. இதனை சாதாரண குழந்தைகளும் வீட்டில் செய்யலாம். வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே இவ்வாறான விளையாட்டு வழிகளை கண்டுபிடிக்கலாம்.
ஐம்புலன் ஒருங்கிணைப்பு…
நம் புலன்களான தொடுதல், பார்த்தல், கேட்டல், நாவுணர்தல், நுகர்தல் என இந்த ஐந்திலும் பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சி முழுமையாக இருக்காது. வளரும் பருவத்தில்தான் இவை முறையான ஒருங்கிணைப்பு பெறுகிறது. அதனால் முதல் ஐந்து வயதிற்குள் இந்த ஐந்து புலன்களும் ஒருங்கிணைப்பு பெறவில்லையெனில் (Sensory Processing Disorders) சிக்கல்கள் வரும் வாய்ப்பு உள்ளது.இதனை ஒருங்கிணைக்கவே இந்த விளையாட்டு வழிகள் உதவி செய்கிறது. இவ்வாறு ஒருங்கிணைத்தால் மட்டும்தான் ஒரு குழந்தையால் இயல்பான வாழ்வை வாழ முடியும். உதாரணமாக, ஒரு சில குழந்தைகளுக்கு ஆடையின் பின்னால் உட்பகுதியில் இருக்கும் அடையாள டேக் (Tag) பிடிக்காது. அந்த டேக் கழுத்தில் உறுத்துவது அவர்களின் அமைதியை பாதிக்கிறது. இதனால் அவர்கள் கோபப்படுவது, பதட்டப்படுவது, விளையாடாமல் தனித்து இருப்பது, அழுவது போன்ற சிக்கல்கள் ஏற்படும். இது மட்டுமில்லாமல், குக்கர் விசில், மிக்ஸி போன்ற சத்தத்திற்கு காதுகளை உடனடியாக மூடிக்கொள்வது, கால் விரல்களில் ஊன்றி நடப்பது, எளிதாக படிகளில் இறங்க முடியாமல் ஏறி இறங்குவதில் சிரமப்பட்டு பயந்து கொண்டு இருப்பது, குழகுழவென இருக்கும் உணவுகளை விரும்பாமல் உதிரியாக இருக்கும் உணவுகளான தோசை, அப்பளம் போன்ற உணவுகளை விரும்புவது என இது போன்ற பல சிக்கல்களை அனைத்துக் குழந்தைகளும் எதிர்கொள்வார்கள். எனினும், ஒரு சில குழந்தைகளுக்கு இதனை ஒருங்கிணைத்து கடந்து வருவது சவாலான ஒன்று.மொத்தத்தில் குழந்தையின் முதல் ஐந்து வருடங்கள் மிகவும் முக்கியமான காலகட்டம். இதில்தான் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு (Growth & Development) பாதை இருக்கிறது. எனவே, இந்த நேரத்தில் தொலைபேசி, தொலைக்காட்சி எனக் குழந்தைகளை மூழ்கடிக்காமல் இவ்வகை விளையாட்டுகளில் கவனம் செலுத்தலாம். இதனால் சொல்பேச்சு கேட்கும் குழந்தையாகவும், அறிவிலும், ஆற்றலிலும் வல்லமை மிக்க குழந்தையாகவும் வளர்க்க முடியும் என்பதனை பெற்றோர்களும் வீட்டில் உள்ளவர்களும் உணர்வோமாக.
தொகுப்பு: கோமதி இசைக்கர்
