நன்றி குங்குமம் தோழி
ஒரு வீடு காற்றோட்டத்துடன் வெளிச்சமாகவும் இருந்தால்தான் பார்ப்பதற்கு கலையம்சத்துடன் காணப்படும். எவ்வளவோ செலவு செய்து வீடு கட்டியிருந்தாலும், போதிய காற்றோட்டமும் வெளிச்சமும் இல்லையெனில் வீடு கலையிழந்து காணப்படும். அதற்கு முக்கியமானவை ஜன்னல்கள். ஒவ்வொரு அறையிலும் அந்த இட அமைப்பிற்கேற்றவாறு ஜன்னல்கள் அவசியம், அந்த ஜன்னல்களை அப்படியே விட்டு விடாமல் அதையும் அழகுபடுத்தி பார்க்கலாம்.
ஜன்னல்களுக்கு பொலிவினை கொடுப்பது திரைச்சீலைகள். இவை இல்லை என்றாலும் யாரும் ஏன் போடவில்லை என்று கேட்கப்போவதில்லை. ஆனால், திரைச்சீலைகள் வீட்டின் அழகினை முழுமையாக எடுத்துக்காட்டும். ஜன்னல் மட்டுமல்லாது கதவுகளுக்கும் மாட்டலாம். அதனைதான் ‘இன்டீரியர் டெக்ரேஷன்’ என்கிறோம். திரைச்சீலை போட வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு துணியை மாட்டிவிட முடியாது. சுவரின் நிறம், அருகிலுள்ள மற்ற ெபாருட்களோடு ஒத்துப் போகும் தன்மை இவற்றிற்கேற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். இதை ‘வின்டோ ட்ரீட்மென்ட்’ என்றுகூட சொல்லலாம். திரைச்சீலைகள் பங்களா அல்லது தனி வீடுகளுக்குத்தான் பொருந்தும் என்றில்லை… சிறிய வீட்டைக்கூட அலங்காரம் செய்வதால், பெரிது போல் காட்டலாம். குட்டையான சுவற்றை உயரமாகவும், அகலம் குறைந்த இடத்தை அகலமாக இருப்பது போன்றும் காட்டலாம். அனைத்தும் நம் ரசனையை பொறுத்தே அமையும்.
ஒரு அறையின் அழகை முழுதாக பிரதிபலிப்பதில் திரைச்சீலைகளுக்கு முக்கியப் பங்குண்டு. பர்னிச்சர் நிறங்களிலேயே திரைச்சீலைகள் ஒரே மாதிரி போட்டால் ‘டிசைன் எலிமென்ட்’ என்பார்கள். ‘சோபா’ போன்ற பர்னிச்சர்களின் நிறங்களுக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் திரைச் சீலைகள் போட்டாலும் அழகாக இருக்கும். வெறும் திரைச்சீலைகள் என்றில்லாமல், பட்டையாக மடிப்பு சேர்த்தாலும் அழகு மெருகூட்டும். சில வருடங்களுக்கு முன் திரைச்சீலைகளை ‘பெல்மெட்’ (Pelmet) அமைத்து தொங்கவிட்டார்கள். அதாவது, நிலையின் மேற்புறம் மரத்தினால் ‘பாக்ஸ்’ போன்று அமைத்து, உட்புறம் பைப்பில் திரைச்சீலையை தொங்க விடுவார்கள். உட்புறம் வெளிக்குத் தெரியாமல், சுருக்கங்கள் மட்டும் பார்க்க அழகாக இருக்கும். அதன் பின் இருபுறம் நிலையில் ‘கிளிப்’ போன்று அமைத்து, நடுவில் அலுமினிய குழாயில் மாட்டப்பட்டது. அதில் நிறைய வகைகள் இருந்தன. இவை எல்லாம் மாறி இன்று பல புது வடிவங்களில் கிடைக்கிறது. குறிப்பாக வண்ணமயமான ரெடிமேட் திரைச்சீலைகள் இன்று நிறைய உள்ளன. ‘ரிச் லுக்’ வேண்டுமானால், வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான ஓரங்கள் கொண்ட அமைப்புகளை பயன்படுத்தலாம்.
திரைச்சீலை போடு முன் நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பாதுகாப்பிற்காகவா, வெளிச்சத்தைக் கட்டுப்படுத்தவா, அழகிற்கா என்று திட்டமிட வேண்டும். உதாரணத்திற்கு, படுக்கையறை பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதிக ஜன்னல்கள் இருந்தால் காலையில் சூரிய ஒளி கண்களுக்கு நேரே பட்டால், தூக்கம் பாதிக்கும். வெளிச்சத்தைக் கட்டுப்படுத்த கனமான திரைச்சீலைகள் போடலாம். இவற்றை திரைச்சீலைகளாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலர் கையினை துடைக்க பயன்படுத்துகிறார்கள். அதேபோல் பல நாட்களுக்கு சுத்தம் செய்யாமல் இருந்தால் திரையின் பின்புறம் ஒட்டடைகள் படியும். பராமரிக்க முடியவில்லை என்றால் திரைச்சீலைகளை போடாதீர்கள். அலங்கரிக்கிறோம் என்கிற பெயரில் இடத்தின் பொலிவை இழந்துவிடாதீர்கள். குறைந்த இடங்களில், குறைவான செலவில் போட்டாலும் பராமரிப்பது அவசியம். ஜன்னல் டெக்ரேஷன் அவரவர் வசதி, விருப்பம், பட்ஜெட் படி தேர்வு செய்யலாம். துணியினால் திரைச்சீலைகள் போடலாம். அழகிய மணிகள், பிளைண்ட்ஸும் பயன்படுத்தலாம். காட்டன், டெரிகாட்டன், சில்க், சாட்டின் என வித விதமாகவும் உள்ளன. ‘டிராக்’ அமைத்தும் தொங்க விடலாம். நம் சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு அமைப்பது நல்லது.
உதாரணத்திற்கு அழகான ‘சாட்டின்’ துணியில் திரைச்சீலை போடும் போது, மழை மற்றும் குளிர் காலங்களில் நன்றாக இருக்கும். வெயில் காலத்தில் புழுங்கும். அந்த சமயத்தில் காட்டன் திரைச்சீலைகள் உத்தமம். அதனால் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப மாற்றி போடலாம். திரைச்சீலைகளில் நிறைய சுருக்கங்கள் வைத்து தைத்துப் போட்டால் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும். அதில் ‘சிங்கிள் ப்ளீட்ஸ்’ என்பது ஒத்தை மடிப்புக்களாகத் தெரியும். ‘டபுள் ப்ளீட்ஸ், இரட்டை மடிப்பு. ‘பிரெஞ்ச் ஹெட்ஸ்’, பொதுவான அமைப்பு. ரிச்லுக்கிற்கு ‘பிளைண்ட்ஸ்’ போடலாம். ஒரு அறையை அழகாக எடுத்துக்காட்ட வேண்டுமென்றால், நல்ல நிறம், டிசைன்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வீட்டிலுள்ள பொருட்கள் சுவர் நிறத்தில் இருந்தால், வெளிர் நிறத்தில் அதில் அடர்த்தியான டிசைன் போட்ட திரைச்சீலைகள் பயன்படுத்தலாம். மெல்லிய சிந்தடிக் துணியை பார்க்கும் போது கொசுவலை போன்றிருக்கும். அதில் அதே நிறத்தில் லைனிங் துணி இணைத்துப் போடும் பொழுது பார்க்க ரொம்ப அழகாக தெரியும். பெரிய முழு சுவர் அளவு கொண்ட ஜன்னல்களுக்கு மேலே வளைவுகள் இணைத்துப் போடும் பொழுது மிக அழகாகத் தெரியும். சிறிய வட்டங்கள், ஓவல் போன்றெல்லாம் வடிவத்தில் கூட நம் கலைத்திறனுக்கேற்றவாறு வரைந்து பார்த்து அழகிய அமைப்புகளில் நாமே உருவாக்கிக் கொள்ளலாம்.
அடர் நிறங்களில் தொங்கும் அமைப்பு இருந்தால், அதே வெளிர் நிறங்களில் ‘டிசைன்’ அமைத்துக் கொள்ளலாம். தொங்கும் திரைச்சீலை வெளிர் நிறத்தில் இருந்தால், மேலே செய்யப்படும் வேலைப்பாடுகள் அடர் நிறத்தில் இருக்கலாம். திரைச்சீலைகள் அறையை அழகாக்கிக் காட்டுவதுடன், பொருட்களை விலை மதிப்புடையது போன்றும் தோற்றம் தரும். இடத்திற்கேற்றபடி அமைப்பது என்பது ஒரு கலையாகும். எல்லோரும் போடுகிறார்களே நாமும் போடுவோம் என்று மாட்டக்கூடாது.
வரவேற்பறையில் சுவரின் நிறம், தரை, அங்குள்ள விளக்குகள், ஜன்னல்களின் திரைச்சீலைகள் இவை அனைத்தும் சேர்ந்துதான் ‘ஆஹா’ என்று சொல்ல வைக்கும். ஜன்னலில் இருந்து வெளியாகும் வெளிச்சம் மற்றும் வெயிலையும் கட்டுப்படுத்ததான் என்று நினைத்து பழைய பயன்படுத்தாத துணிகள், புடவைகளை தைத்து மாட்டி விடுவர். அப்படி செய்தாலும் அந்த இடத்திற்கு ஒத்துப்போகுமா என்றும் பார்க்க வேண்டும். தங்கள் வீடு அழகாக இருக்க வேண்டும் என்பதுதான் பெண்களின் கனவு. பழைய துணியில் பார்டர் அமைத்து, குஞ்சங்கள் இணைத்தால், அரண்மனை போன்று கூட தெரிய வைக்கலாம். வெயில், குளிர் காலங்களுக்கு தனித்தனியாக பயன்படுத்த முடியாது என்று நினைப்பவர்கள், இரண்டு காட்டன் செட் திரைச்சீலைகள் வைத்துக் கொண்டாலே போதும். சிந்தடிக் வகைகள் குளிர் காலத்திற்கு ஏற்றது. வெயில் காலங்களில் காற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தி விடும். சிந்தடிக் விருப்பம் என்றால், வெளிர் நிறங்களை தேர்ந்தெடுக்கலாம்.
பழைய இடத்தைக் கூட ஒரு சில ஐடியாக்களை கொண்டு புதிது போல காட்டலாம். கலை ரசனையும், பராமரிக்கும் ஆற்றலும் இருந்தால் போதும்… எதுவும் சாத்தியமே!
நம்மை அரவணைத்து அமைதி தரும் வீட்டை, மனதை மகிழ்ச்சிப்படுத்தும் இருப்பிடமாக அவ்வப்பொழுது மாற்றங்கள் செய்தால், மனசு மட்டுமில்லை இடமும் புதிதாக இருப்பது போல் அமையும். வீட்டை மாற்ற முடியாது. வீட்டிலுள்ள பொருட்களை மாற்றி அமைப்பதால் புதியதொரு வடிவம் தர முயற்சிக்கலாம். நம் பெரியோர்கள் வாழ்ந்த வீடுகளில் முற்றம், திறந்த வெளியிடம் இருக்கும். வெயில் காலங்களில் அதிலிருந்து வெப்பம் மற்ற அறைகளுக்கும் பரவும். அதை தடுக்க, மூங்கில் தட்டிகளை தொங்கவிட்டார்கள். இது வெப்பத்தை கட்டுப்படுத்தியது. இன்றைய விஞ்ஞான உலகில் அனைத்தும் நமக்கு ரெடிமேடாகக் கிடைக்கிறது. தெரியாத விஷயங்களை வழிகாட்ட நிபுணர்கள் ஒவ்வொரு துறையிலும் இருக்கிறார்கள். எந்தப் பொருள் எங்கு கிடைக்கும் என்பதை ‘கூகுளே’ சொல்லித் தருகிறது.
சிலர் ஜன்னல்களுக்கு திரைச்சீலைகள் போட்டால் வீடு இருட்டாகி விடுமோ என்று பயப்படுவார்கள். ஜன்னல் கதவுகளை பின்புறம் திறந்து விட்டு முன்புறம் திரைச்சீலையை தொங்கவிடலாம். அப்பொழுதும் போதிய வெளிச்சம் கிடைக்கவில்லை என்றால், இரண்டு, மூன்று பகுதிகளாக பிரித்து கிளிப் போட்டு டிசைன் செய்யலாம். பெரிய அறைகள், ஹால் போன்ற இடங்களில் கதவுகளுக்கு அழகுபடுத்தலாம். சிறிய அறைகளில் எல்லா இடங்களிலும் திரைச் சீலைகள் தொங்க விடுவது அழகாக இருக்காது. நீளமான வரவேற்பு அறையினை ஒரு பக்கம் சாப்பிடும் இடமாக திரைச்சீலைகள் கொண்டு பிரிக்கலாம். தேவைப்படும் போது அதை நீக்கிவிடலாம். சங்கு கிளிஞ்சல் போன்றவற்றில் கூட திரைச்சீலைகள் அமைக்கலாம். வீட்டிற்காக நாம் செய்யும் அலங்காரங்கள் யோசித்து செயல்படுத்துவதாக இருக்க வேண்டும். காரணம், நாம் தினசரி வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் அல்ல அவை. வீட்டிற்கு ஒருமுறை செய்யும் செலவு. நாம் எதற்காக செய்கிறோமோ அந்த காரியம் பூர்த்தியாவதுடன், போதிய அழகைத் தர வேண்டும். எங்கேயோ நாம் பார்த்ததை நம் வீட்டில் போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கக்கூடாது. நம்முடைய இடவசதிக்கும், தோற்றத்திற்கும் எது பொருந்துமோ, அத்தகைய அமைப்பைத் தந்தால்தான் பொருந்தும். இடத்திற்கு தகுந்த அமைப்பு கொடுப்பதன் மூலம் எப்படிப்பட்ட இடத்தையும் அழகாகக் காட்ட முடியும். பழைய இடத்தைக் கூட ஒரு சில ஐடியாக்களை கொண்டு புதிது போல காட்டலாம். கலை ரசனையும், பராமரிக்கும் ஆற்றலும் இருந்தால் போதும்… எதுவும் சாத்தியமே!
தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்
