தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மட்டுமல்ல!

நன்றி குங்குமம் தோழி

உச்சி முதல் பாதம் வரை தேங்காய் எண்ணெய்தான் தேகத்தின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் மிகச் சிறந்தது என்கின்றனர் சரும ஆராய்ச்சி வல்லுநர்கள். இயற்கை தந்த அதிசயமான தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கை கிருமி நாசினி. இதிலுள்ள லாரிக் அமிலம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை பெற்றுள்ளது. இயற்கையான மாய்ஸ்ரைசராக பயன்படுத்தப்படும் இந்த எண்ணெய் வறண்ட சருமத்திற்கு குட்பை சொல்லி ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.

‘‘சர்க்கரையுடன் சேர்த்து ஸ்கிரப்பராக வும் உதட்டு தைலமாகவும் மேக்கப்பினை கலைக்கவும் இதனை பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்தும் போது தேங்காய் எண்ணெயில் ஆன்டிமைக்ரோபியல் என்ற சிறந்த நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன்கள் உள்ளதால் அது சருமத்திற்கு நல்ல பொலிவும் ஆரோக்கியமும் தருகிறது. குறிப்பாக கோடை காலத்தில் ஏற்படும் வெப்பம், வறட்சி மற்றும் வியர்வை பாதிப்புகளில் இருந்து சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்க தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும். அதனாலேயே ஆர்கானிக் அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் போது தேங்காய் எண்ணெயைதான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்துகிறோம்’’ என்கிறார், இயற்கையான கிரீம்கள், சோப், ஷாம்பூக்கள், எண்ணெய்களை தயாரிக்கும் ‘தி பாரம்பரியம்’ நிறுவனத்தின் நிறுவனர் கௌசல்யா.

இவர் தன் கணவர் கோகுல்நாத்துடன் இணைந்து இதனை நிர்வகித்து வருகிறார். ‘‘சொந்த ஊர் காங்கேயம். அப்பா, அம்மாவிற்கு விவசாயம்தான் முக்கியத் தொழில். அக்கா ஐ.டி பொறியியல் முடிச்சாங்க. நான் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ருமென்டேஷன் முடிச்சேன். பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தேன். கடைசியாக ஜெர்மன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தேன். ஒரு காலக்கட்டத்தில் நாங்க பொண்ணுங்க என்பதால், அப்பா, அம்மாவிற்குப் பிறகு அவர்கள் பார்த்து வந்த விவசாயம் அவர்களோடு முடிந்துவிடக்கூடாதுன்னு நினைச்சேன். அக்கா ஐ.டியை விட்டு வர தயாராக இல்லை. என் கணவர் எங்கள் பரம்பரை தொழிலான சைக்கிள் வியாபாரத்தைப் பார்த்தார். நான் கொஞ்சம் மாறுபட்டு யோசித்து விவசாயத்தை கையில் எடுத்தேன்.காங்கேயம் பகுதியில் தேங்காய் மகசூல் அதிகம். எங்களுக்கு சொந்தமான நிறைய தென்னை மரங்கள் இருந்தன. தேங்காயை எல்லோரையும் போல கொப்பரையாகவோ தேங்காய் எண்ணெயாகவோ விற்காமல் வேறு விதங்களில் மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றலாம்னு திட்டமிட்டேன். சொந்தமாக பசுமாடுகளும் இருந்ததால், பால் விற்பனையும் எங்களின் பிரதான தொழிலாக இருந்தது. பூந்தோட்டங்களும் இருந்தன. ஆனால், இதிலிருந்து கிடைத்த வருமானம் எங்களுக்கும் எங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் உழைப்புக்கேற்ற கூலி கிடைக்கவில்லை. கொரோனா தொற்று முடிந்த சமயத்தில் எல்லோரும் ஆர்கானிக் உணவினை தேட ஆரம்பித்தனர். நான் அதற்கு நேர் மாறாக ஆர்கானிக் காஸ்மெடிக்ஸ் குறித்து யோசித்தேன்’’ என்றவர், அதில் அவர் கால் ஊன்றியது குறித்து பகிர்ந்தார்.

முதன்முதலில் தேங்காயில் ஹெர்பல் எண்ணெயும், நலுங்கு மாவு, சோப்பும் தயாரித்தேன். எனக்கும் என் கணவருக்கும் நண்பர்கள் வட்டம் அதிகம். அவர்களிடம் நான் உற்பத்தி செய்த பொருட்களை கொடுத்தேன். அவர்கள் பயன்படுத்தியது மட்டுமல்லாமல் அதற்கான வரவேற்பும் கொடுத்தார்கள்.’’

‘‘ஆர்கானிக் காஸ்மெடிக்ஸ் குறித்து தேடலின் போது ‘நேஷனல் ஸ்கில் டெவலப்மென்ட் ஆப் இந்தியா’ பயிற்சி நிறுவனம் பற்றி தெரிய வந்தது. அவர்கள் காஸ்மெடிக்ஸ் குறித்து பயிற்சி அளிக்கிறார்கள். அதில் சேர்ந்து டிப்ளமோ முடித்தேன். இது ஆன்லைன் பயிற்சி என்பதால் என் வேலைக்கு நடுவே ஆறு மணி நேரம் இதற்காக ஒதுக்கினேன். ஒன்றரை வருடத்தில் இந்தப் பயிற்சியினை முழுமையாக முடித்து தேர்ச்சியும் பெற்றேன். பயிற்சியோட நிறுத்திக் கொள்ளாமல், ஆர்கானிக் காஸ்மெடிக்ஸ் குறித்து நடைபெறும் அனைத்து வர்க்‌ஷாப்பிலும் கலந்து கொள்வேன். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட வர்க்‌ஷாப்பில் கலந்து கொண்டு தனிப்பட்ட பயிற்சி பெற்றிருக்கிறேன். பல இடங்களில் பயிற்சி எடுத்ததால், எந்தெந்த பொருட்களுடன் என்னென்ன பொருட்களை சேர்க்கலாம், சேர்க்கக் கூடாது போன்ற நுணுக்கங்கள் தெரிந்தது. இதில் முழு பயிற்சி பெற்ற பிறகு என்னால் இதனை தனிப்பட்ட முறையில் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தவுடன் என் வேலையை ராஜினாமா செய்தேன்.

2019 டிசம்பர் மாதம், ‘தி பாரம்பரியம்’ என்ற பெயரில் MSMEயில் பதிவு செய்து அடிப்படை அழகுப் பொருட்களை தயாரிக்க துவங்கினோம். முதன்முதலில் தேங்காயில் ஹெர்பல் எண்ணெயும், நலுங்கு மாவு, சோப்பும் தயாரித்தேன். எனக்கும் என் கணவருக்கும் நண்பர்கள் வட்டம் அதிகம். அவர்களிடம் நான் உற்பத்தி செய்த பொருட்களை கொடுத்தேன். அவர்கள் பயன்படுத்தியது மட்டுமில்லாமல் அதற்கான வரவேற்பும் கொடுத்தார்கள். இன்றளவில் எங்களின் பிசினஸிற்கு அவர்களின் ஆதரவு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்களால்தான் எனக்கு 100க்கும் மேற்பட்ட ரெகுலர் வாடிக்கையாளர்கள் ேசர்ந்தார்கள்’’ என்றவர், தான் தயாரிக்கும் பொருட்கள் குறித்து விவரித்தார்.

‘‘வீட்டிலிருந்துதான் என் தொழிலை ஆரம்பித்தேன். ஆனால், பெரிய அளவில் ஆர்டர் வரும் போது அதை வீட்டில் வைத்து செய்ய முடியவில்லை. மேலும், வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து வாங்கவும் ஆரம்பித்தனர். அதனால் என் கணவரின் சைக்கிள் கடையில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி அங்கு தயாரிக்க ஆரம்பித்தேன். கோவிட் முடிந்த சமயத்தில் இன்ஸ்டாகிராமில் என் தயாரிப்பு தொடர்பான வீடியோக்களை பதிவிட்டேன். அதில் நேரடி உற்பத்தி வீடியோக்களை போடுவேன். என் வீடியோக்களை பார்த்தவர்களுக்கு எங்கள் உற்பத்தி பொருட்களும் பிடிக்க ஆரம்பித்தன. பயன்படுத்தியவர்கள் திரும்பத் திரும்ப வாங்கி ஆதரவளித்தனர். சோப்பினை தொடர்ந்து சிகைக்காய் பவுடர், பட்டர் சார்ந்த கிரீம்கள், மாய்ஸ்ரைசர், லிப் பாம்கள் என தயாரிக்க ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்களும் உயர்ந்ததால் தயாரிப்பு யூனிட் பக்கத்திலேயே ஸ்டோர் அவுட்லெட்டும் வைத்தேன்’’ என்றவர், ஒரு பெண்ணாக சவால்களை எதிர்கொண்டது குறித்து பேசினார்.

‘‘இரண்டாவது மகன் பிறந்த போது என்னால் முழு நேர உற்பத்தியில் ஈடுபட முடியவில்லை. அப்போது காஸ்மெடிக்ஸ் துறையில் பி.டெக் படித்த பெண்கள், இளைஞர்களை வேலைக்கு அமர்த்தினேன். தமிழ்நாட்டில் காஸ்மெடிக்ஸ் சம்பந்தமான டிப்ளமோ படிப்புகள் மட்டுமே உள்ளன. ஆனால், வட இந்தியாவில் காஸ்மெடிக்ஸில் டிகிரி படிப்புகளும் உள்ளன. இத்தகைய துறை சார்ந்த இளைஞர்களை பணிக்கு அமர்த்தியதால் அவர்களின் ஆலோசனைப் பெயரில் நிறைய தயாரிப்புகளை உருவாக்கினேன். சருமப் பராமரிப்பு பொருட்கள், எண்ணெய் சார்ந்த சோப்புகள், தலைமுடி பராமரிப்புக்கு ஷாம்பூ, பவுடர், மரத்தாலான சீப்கள், ஸ்கிரப்பர்கள் என ஒவ்வொன்றாக அறிமுகம் செய்தோம். தயாரிப்புக்கு தேவையான தேங்காய், பூக்கள், வெண்ணெய் போன்றவற்றை எங்களின் தோட்டத்தில் விளைவதையே பயன்படுத்திக் கொள்கிறோம். அதிகம் தேவைப்பட்டால் இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களிடம் நேரடி கொள்முதல் செய்கிறோம். செயற்கை நிறமிகள் மற்றும் வாசனை திரவியங்களை நாங்க பயன்படுத்துவதில்லை’’ என்று அழுத்தமாக கூறுகிறார். ‘‘எங்களின் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமில்லாமல் அழகு நிலையங்களிலும் சப்ளை செய்கிறோம். அதில் அவர்களின் பிராண்டுகளின் பெயரினை லேபிள் செய்து விற்பனை செய்கின்றனர்.

பொருட்கள் முழுக்க முழுக்க ஆர்கானிக் என்பதால் அழகு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களும் எந்தவித குறைகளையும் சொல்வதில்லை. அதனால் அவர்களின் தொழிலும் எங்களின் பொருட்களை பயன்படுத்துவதால் மறைமுகமாக வளர்கிறது.விவசாயத்தில் லாபம் இல்லை என்று கன்னத்தில் கை வைக்காமல் அதனை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்று யோசித்தால் நாமும் பயனடையலாம், விவசாயத்தையும் வளர்க்கலாம். எங்கள் நிறுவனத்தில் பெரும்பான்மையோர் பெண்களே பணிபுரிகின்றனர். சில கல்லூரி செல்லும் இளம்பெண்களும் பகுதி நேரமாக இங்கு வேலை பார்க்கிறார்கள். சுத்தமான தேன், குல்கந்து, ABC மால்ட், தேன் நெல்லிக்காய், முருங்கை பவுடர், முளைக்கட்டிய தானியங்கள் பவுடர், செவ்வாழை பழ மால்ட், நெய், கொங்கு நாட்டு ஸ்டையில் எள்ளுப்பொடி ஆகியவையும் விற்பனை செய்கிறோம். எங்க வீட்டு சமையல் அறையில் துவங்கிய இந்த பிசினஸ் இன்று சொந்த மாக பேக்டரி வைக்கும் வரை வளர்ந்துள்ளது. எந்தத் தொழில் ஆனாலும் அறிவுப்பூர்வமாக யோசித்தால் சரியான முன்னேற்றப் பாதையில் பயணிக்கலாம்’’ என்கின்றனர் கௌசல்யா கோகுல்நாத் தம்பதியினர்.

தொகுப்பு: கலைச்செல்வி

 

Related Stories: