மும்பை: மகாராஷ்ராவில் மகளிருக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டத்தில் இருந்து திடீரென 73 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உடைய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு லட்கி பகின் திட்டத்தின் கீழ் மாநில அரசு சார்பில் மாதம் ரூ.1,500 வழங்கப்படுகிறது. இதில் அரசு பணியாளர்கள், வேறு திட்டங்களில் நிதியுதவி பெறும் பெண்கள், கார் வைத்திருப்பவர்கள், 65 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் பலரும் பயன்பெற்றதாக தெரிகிறது.
இது தொடர்பாக வந்த புகார்களின் கீழ் உண்மையை கண்டறிய பயனாளிகள் அனைவரும் கேஒய்சி விவரங்களை சமர்ப்பிக்க மாநில அரசு உத்தரவிட்டது. இதன்படி பயனாளிகள் பலரும் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆன்லைன் வாயிலாக கேஒய்சி விவரங்களை சமர்ப்பித்து வருகின்றனர். முதலில் இதற்கு ஏப்ரல் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த விவரங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், தகுதியற்றவர்கள் என்று கூறி 73 லட்சம் பெண்களை லட்கி பகின் திட்ட பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டனர்.
இதில் சுமார் 50 லட்சம் பேர் கேஒய்சி விபரங்களை சமர்ப்பிக்க தவறியவர்கள். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்ததால் 1.2 லட்சம் பெண்கள் நிதியுதவி பெறும் தகுதியை இழந்தனர். சொந்தமாக கார் வைத்திந்த 5 லட்சம் பெண்கள் தகுதி இழந்தனர். நமோ ஷேத்கரி யோஜனா திட்டத்தில் நிதியுதவி பெறும் மேலும் 5 லட்சம் பெண்கள் லட்கி பகின் திட்ட பயனாளிகள் பட்டியலில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 4.5 லட்சம் பெண்களின் வயது 65க்கும் மேலாகிவிட்டதால் அவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல பெண்கள் தாங்கள் முறையான கேஓய்சி விபரங்களை சமர்ப்பித்தும் உதவித் தொகை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தகுதியான பெண்களுக்கு ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதற்கிடையே மகாராஷ்டிர அரசு எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாகவே பயனாளிகளை நீக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
