புதுடெல்லி: தேர்வு தொடர்பான குளறுபடிகள் காரணமாக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி அமைதி போராட்டம் நடத்த, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே வரும் 6ம் தேதி டெல்லி வருவதாக அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என விமர்சித்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற நையாண்டி குழு சமூக ஊடகத்தில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது.
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வரும் அபிஜித் திப்கே என்பவர் தொடங்கிய இக்குழு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசியலமைப்பு சட்டத்தின் வழிநின்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி அமைதியான முறையில் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.
நாம் அனைவரும் ஒருமித்த குரலில் பேசினால், அவர்கள் நிச்சயம் செவிசாய்க்க வேண்டியிருக்கும். அதற்காக, வரும் ஜூன் 6ம் தேதி டெல்லி வருகிறேன். தயவுசெய்து நீங்கள் (இளைஞர்கள்) விமான நிலையத்தில் என்னுடன் இணையுங்கள். அங்கிருந்து நாம் அனைவரும் ஒன்றாக சென்று, ஜந்தர் மந்தரில் அமைதி போராட்டம் நடத்துவதற்கான அனுமதியை பெற பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு செல்வோம். நீட், சிபிஎஸ்இ, கியூட் மற்றும் எஸ்எஸ்சி போன்ற தேர்வுகளை எழுதும் மாணவர்கள் உட்பட 1 கோடிக்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி அவர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தும் வகையில் தேர்வு தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
இத்தகைய மிகப்பெரிய குளறுபடி நிகழ்ந்த பிறகும் கல்வி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால், நாட்டில் ‘பொறுப்புடைமை’ என்ற ஒன்றுக்கே இடமில்லை என்றுதான் அர்த்தம். மகாத்மா காந்தி, அம்பேத்கர், பகத் சிங் மற்றும் நேருவின் தீவிர ரசிகன் நான். மற்ற எதையும் விட அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஆகவே, அமைதியையும் அரசிலயமைப்புச் சட்டத்தையும் மதிக்கும் கரப்பான் பூச்சிகளே, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை காக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம். இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
‘கைது செய்யப்படக் கூடும்’
அபிஜித் திப்கே தனது வீடியோவில், ‘‘டெல்லி வந்தால் என்னை கைது செய்து விடுவார்கள் என எனது குடும்பத்தினரும், நண்பர்களும் அச்சப்படுகின்றனர். ஆனால், நமது நாடு இன்றும் ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. அமைதியாகப் போராடுவதற்கான அனுமதி நமக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என கூறி உள்ளார். மேலும், ‘‘இன்னும் எவ்வளவு காலம் தான் சிறைவாசம் குறித்து பயத்துடனே வாழ்வது?’’ என இளைஞர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
