சமூக வலைதளங்களில் இளைஞர்கள் ‘கரப்பான்பூச்சி’ கட்சியை பின்தொடர வேண்டாம்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்

 

திருவனந்தபுரம்: நேர்மறையான தகவல்களை வெளியிட்டால் மட்டுமே இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்கும் என துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலையாள நாளிதழின் 140ம் ஆண்டு விழாவில் பங்கேற்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், இளைஞர்கள் தவறான பாதையில் செல்வது குறித்து கவலை தெரிவித்தார். அப்போது துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘நாட்டின் நேர்மறையான வளர்ச்சி மற்றும் சாதனைகளை ஊடகங்கள் முக்கியத்துவத்துடன் வெளியிட வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால், இளைஞர்கள் ஆர்வத்தை இழந்து ‘கரப்பான் பூச்சி’ போன்ற தேவையற்ற விஷயங்களைப் பின்தொடரும் நிலை ஏற்படும். 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக உருவெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் அவசியம். கருத்து சுதந்திரத்திற்கு நான் எதிரி அல்ல, ஆனால் தரம் இல்லாத விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது கண்டிக்கத்தக்கது.

செய்திகளில் சொந்த கருத்துகளை திணிக்காமல், உண்மைகளை மட்டும் பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறினார். இந்த விழாவில் கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வழக்கறிஞர்கள் தகுதி தொடர்பான வழக்கில், போலி பட்டங்கள் பெற்று வருபவர்களை ‘கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள்’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் நையாண்டி பக்கங்கள் உருவாக்கப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தேர்வுத்தாள் கசிவு போன்ற பிரச்னைகள் குறித்து கிண்டலான பதிவுகள் வைரலாகி வருகின்றன.
இளைஞர்களிடையே இந்த கலாசாரம் அதிகரித்து வரும் நிலையில், ஊடகங்களின் பொறுப்பு குறித்து துணை ஜனாதிபதி விளக்கி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: