பாலியல் தொழில் தடுப்பு, பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் மட்டுமின்றி சிறார்களை கடத்தினால் ‘போக்சோ’ சட்ட பிரிவிலும் வழக்கு பதியலாம்: உச்ச நீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பு

 

புதுடெல்லி: வணிக ரீதியிலான பாலியல் சுரண்டலுக்காக சிறார்களை கடத்தும் நபர்கள் மீது, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் மட்டுமின்றி, போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

‘பிரஜ்வலா’ என்ற தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘பாலியல் சுரண்டலுக்காக சிறார்களை கடத்தும் நபர்கள் மீது, பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் மட்டுமின்றி, போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கில் சிறார்களின் சம்மதம் என்பது சட்டப்படி செல்லாது. மிரட்டல் அல்லது ஏமாற்று வேலைகள் மூலம் கடத்தப்படும் போது அவர்களின் சம்மதத்தை தற்காப்பு வாதமாக குற்றவாளிகள் பயன்படுத்த முடியாது.

அரசியலமைப்பு மனித கடத்தலை முற்றிலும் தடை செய்வதால், இது அரசுக்கு மட்டுமின்றி பாலியல் சுரண்டலில் ஈடுபடும் தனிநபர்களுக்கும் எதிராக பொருந்தும். ஒருவர் பாலியல் தொழிலுக்கு வருவதை அறிந்திருந்தாலும், அவர் ஏமாற்றப்பட்டு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டால் அவரும் பாதிக்கப்பட்டவராகவே கருதப்படுவார். ஒவ்வொரு சட்டத்தையும் தனித்தனியாக பார்க்காமல், பாதிக்கப்பட்டவரின் வயது மற்றும் கடத்தப்பட்ட முறையை கவனத்தில் கொண்டு ஒருங்கிணைந்த முறையில் போலீசார் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

வெறும் மீட்பு நடவடிக்கை மட்டுமே கடத்தல் கும்பல்களை ஒழிக்காது என்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மறுவாழ்வு மற்றும் அதிகாரமளித்தல் அவசியமானது. சட்டப்பிரிவு 21 மற்றும் 23ன் கீழ் அர்த்தமுள்ள மறுவாழ்வு பெறுவது பாதிக்கப்பட்டவர்களின் உரிமை என்பதால், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் பாதிக்கப்பட்டவர்களை வெறும் மீட்பு நடவடிக்கைக்கு உட்பட்டவர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்’ என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: