சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டுக் கட்டணம் திருடர்களிடம் ஜாக்கிரதை: ராகுல் விமர்சனம்

 

புதுடெல்லி: சிபிஎஸ்இ-யின் மறுமதிப்பீட்டு நடைமுறை மற்றும் கட்டணங்கள் குறித்து திருடர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். சிபிஎஸ்இ 12ம் வகுப்பு விடைத்தாள்களை சரிபார்ப்பதற்கு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘திருடர்களிடம் ஜாக்கிரதை. இப்போது அவர்கள் சிபிஎஸ்இக்குள்ளேயே அமர்ந்திருக்கிறார்கள். சிபிஎஸ்இ-யின் பிழை காரணமாக உங்கள் மதிப்பெண்களில் தவறு நேர்ந்தால் உங்களுக்கு கிடைப்பது என்ன? ஒரு கட்டண ரசீது தான்.

கணினிமயமாக்கப்பட்ட நகல் பெறுவதற்கு ஒரு பாடத்திற்கு ரூ.100. மதிப்பெண் மறுக்கூட்டல் செய்வதற்கு ஒரு தாளுக்கு ரூ.100, மறுமதிப்பீடு செய்வதற்கு ஒரு கேள்விக்கு ரூ.25 என்று வசூலிக்கிறார்கள். ஒரு மாணவர் தனது விடைத்தாள் சரியாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவே சுமார் ரூ.2000 வரை செலவழிக்க வேண்டிய சூழல் உள்ளது. 4லட்சம் மாணவர்கள் இதுபோன்ற விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது அதன் மூலம் சிபிஎஸ்இக்கு எவ்வளவு வருவாய் ஈட்டப்படுகின்றது என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

தவறு இழைத்தது சிபிஎஸ்இ. அதற்கான தண்டனையை அனுபவிப்பது மாணவர். ஆனால் அதன் மூலம் கிடைக்கும் லாபம் அரசை சென்றடைகின்றது. கல்வியானது ஒரு சேவையாக கருதப்படாமல் ஒரு தொழிலாக கருதப்படும்போது பிழைகள் சரிசெய்யப்படுவதில்லை. மாறாக அவை பன்மடங்கு பெருகுகின்றன. இதற்கான விலையை நேரம், தன்னம்பிக்கை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை இழப்பதன் மூலம் நமது குழந்தைகளே கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: