உறவினர் வீட்டில் விடுவதாக அழைத்துச்சென்று ஓடும் லாரியில் சிறுமி கூட்டு பலாத்காரம்: தம்பதி உட்பட 3 பேர் கைது

 

வந்தவாசி: உறவினர் வீட்டில் விடுவதாக அழைத்துச்சென்று ஓடும் லாரியில் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆற்காடு தம்பதி உட்பட 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் வந்தவாசியில் உள்ள ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டு துணையாக இருந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அங்கு ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த பாத்திமா(30) மற்றும் அவரது கணவர் லாரி டிரைவர் இம்ரான் பாஷா(35), கிளீனர் அஜ்மல் பாஷா(30) ஆகியோரும் சிகிச்சைக்காக அங்கு வந்துள்ளார்.

அப்போது பாத்திமா சிறுமியிடம் நெருங்கி பேசியுள்ளார். அப்போது பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என அந்த சிறுமி கூறியதாக தெரிகிறது. இதனால் பெங்களூரு அழைத்து செல்வதாகக் கூறி பாத்திமா அந்த சிறுமியை ஆற்காடு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து லாரியில் கணவர் இம்ரான்பாஷா, கிளீனர் அஜ்மல்பாஷா ஆகியோருடன் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. பெங்களூருவில் இம்ரான் பாஷா, அஜ்மல் பாஷா இருவரும் ஓடும் லாரியில் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் அவர்களிடமிருந்து தப்பி ஓடிய சிறுமியை பொதுமக்கள் மீட்டு பெங்களூரில் உள்ள மகளிர் பாதுகாப்பு இல்ல விடுதியில் தங்க வைத்தனர். பின்னர் சிறுமிக்கு வயிற்று வலி அதிகமாகவே விடுதி மகளிர் பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் பெங்களூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது தெரியவந்தது.

உடனே மருத்துவமனை நிர்வாகம் பெங்களூரு போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு வந்தவாசி காவல் நிலையத்திற்கு பெங்களூரு போலீசார் மாற்றினர். தொடர்ந்து வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சங்கர் இதுகுறித்து விசாரணை செய்தார்.

மேலும் போக்சோ வழக்குப்பதிந்து வந்தவாசியில் இருந்து ஆற்காடு வரை செல்ல உடந்தையாக இருந்த பாத்திமா, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இம்ரான் பாஷா, அஜ்மல் பாஷா ஆகிய மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாஜிஸ்திரேட் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

Related Stories: