நாகர்கோவில்: நாகர்கோவிலில் 5 டன் ரேஷன் அரிசி, கோதுமை மூடைகள் ரேஷன் கடையில் இருந்து கடத்தி வரப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்பு உடையவர்களை கைது செய்ய சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த கோவில்விளை பகுதியில், ரேஷன் கடைகளில் இருந்து நேரடியாக கடத்தி வரப்பட்டு ஒரு தென்னந்தோப்பில் பதுக்கப்பட்டு இருந்த, சுமார் 5 டன் ரேஷன் அரிசி, கோதுமை மூடைகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த இரு நாட்களுக்கு முன் சிக்கின. இது தொடர்பாக விசாரணை நடத்தி நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த சகாதேவன் (52), நாகர்கோவில் சரலூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (45), நாகர்கோவில் மூவேந்தர் நகரை சேர்ந்த மோகன் (54) ஆகியோரை கைது செய்தனர். கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைப்பற்றப்பட்ட மூடைகள் அனைத்தும் ரேஷன் கடையில் இருந்து நேரடியாகவே வந்துள்ளது. நுகர்பொருள் வாணிப கழக முத்திரையுடன் இருந்த அந்த மூடைகள் எந்த ரேஷன் கடைகளில் இருந்து எடுத்து வரப்பட்டது என்பது தொடர்பாக பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் கைதாகி உள்ள சகாதேவன் தான், இந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இவர் மூலம் மற்ற 2 பேரும் இந்த மூடைகளை எடுத்து வந்து, சம்பந்தப்பட்ட இடத்தில் வைத்துள்ளனர். சகாதேவனுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சிலருடனும், அதிகாரிகள் சிலருடனும் தொடர்பு இருப்பதாகவும், அவரது செல்போனை ஆய்வு செய்தால், பல தகவல்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான விபரங்களை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசியமாக வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரேஷன் கடை ஊழியருக்கு தெரியாமல் ரேஷன் கடையில் இருந்து மூடைகள் வெளியே வர வாய்ப்பு இல்லை. அவரது உதவி இல்லாமல் இந்த கடத்தல் நடந்து இருக்காது. எனவே இதில் தொடர்பு உடைய ரேஷன் கடை பணியாளர்கள் யார்? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோ மெட்ரிக் முறையில் தான் பொருட்கள் வினியோகம் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் விற்பனை விபரம், இருப்பு விபரம் முறையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அப்படி இருந்தும் ரேஷன் அரிசி மூடைகள், கோதுமை மூடைகள் எப்படி கடத்தல் வியாபாரிகளுக்கு வந்தது என்பது தான் கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பிலும் தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார்கள்.
தனிப்பட்ட நபர் ஒருவர் சேர்ந்து இதை செய்ய வாய்ப்பு இல்லை. நெட்வொர்க் அமைத்து தான் இது போன்ற கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும். ரேஷன் அரிசி மூடைகள் எந்த ரேஷன் கடையில் இருந்து சப்ளை ஆனது என்பது ெதாடர்பான விபரங்களையும் இன்னும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முழுமையாக தெரிவிக்க வில்லை. கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் விசாரணை நடத்தி உள்ளதாக கூறி உள்ளனர். மேலும் விசாரணைக்காக தற்போது கைதாகி உள்ள 3 பேரையும் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இவர்களிடம் விசாரணை நடத்தி, மேற்கொண்டு இதில் தொடர்பு உடையவர்கள் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஏற்கனவே தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடையில் இருந்தே மூடைகள் நேரடியாக ெவளியே கைமாற்றி விடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்ந்து பல முறை நடந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள், காவல்துறையினர் இதை கண்டு கொள்ளாமல் இருந்தது எப்படி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
