ஓசூர்: ஓசூர் அருகே, பணி முடிந்து வீட்டுக்கு சென்ற காவல்நிலைய பெண் ஊழியரை, லிப்ட் தருவதாக கூறி அழைத்துச் சென்று, டெம்போ டிராவலரில் வைத்து சித்ரவதை செய்்து பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன், போலீசுக்கு பயந்து விஷம் குடித்தார். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலூர் அடுத்துள்ள சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், கடந்த 2017ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மனைவிக்கு, கருணை அடிப்படையில், காவல்துறையில் கணினி பிரிவில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை கிடைத்தது.
ஆரம்ப காலத்தில், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அந்த பெண், அதன்பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அவர் பணிமாறுதல் செய்யப்பட்டு, அங்கு பணியாற்றி வருகிறார். தினந்தோறும் அந்த பெண் ஊழியர் பணி முடிந்து, ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து, தனது கிராமமான சத்தியமங்கலத்திற்கு பஸ்சில் செல்வது வழக்கம். கடந்த 16ம் தேதி மாலை, பணி முடிந்து தனியார் பஸ்சில் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர், 2 கிமீ தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த டிரைவரான மூர்த்தி (37) என்பவர், தனது டெம்போ டிராவலரில் அந்த பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றவுடன், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தினார். இதுகுறித்து அந்த பெண் கேட்ட போது, அவரை வாகனத்தின் இருக்கைகளுக்கு இடையே கீழே தள்ளி, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டும், அக்கம்பக்கம் யாருமில்லாததால் உதவிக்கு வரவில்லை. பின்னர், மூர்த்தியிடம் இருந்து தப்பித்து தனது வீட்டுக்கு சென்ற பெண் ஊழியர், நடந்த சம்பவம் குறித்து தனது பார்வை இழந்த தாயார் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் (17ம் தேதி) பாகலூர் போலீசில் அவர் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மூர்த்தியின் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த மூர்த்தியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், பாகலூர் காவல் நிலையத்திற்கு வந்த டிரைவர் மூர்த்தி, காவல்நிலையத்தின் நுழைவுவாயில் அருகே, தான் கொண்டு வந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்ததும் கைது செய்து விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மூர்த்தியால் வன்கொடுமைக்கு ஆளான காவல் நிலைய பெண் ஊழியர், நிருபர்களிடம் கூறியதாவது: சம்பவத்தன்று நான் மாதவிடாய் காரணமாக, மனதளவிலும், உடலளவிலும் பலவீனமாக இருந்தேன். நடக்க முடியாததால், யாராவது வீட்டில் கொண்டு சென்று விட்டால் போதும் என இருந்தேன். அப்போது, எங்கள் ஊரை சேர்ந்த மூர்த்தி என்பவர், என்னை வீட்டில் விட்டு விடுவதாக கூறியதால், அதை நம்பி நான் அவருடன் டெம்போ டிராவலரில் ஏறிச்சென்றேன். உள்ளே சென்றதும், அவர் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார். இதனால், அதிர்ச்சியடைந்து நான் மறுத்ததால், என்னை வயிற்றில் அவரது காலால் எட்டி உதைத்தார். இதில், நிலைகுலைந்து போன நான் கீழே விழுந்தேன்.
மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறேன் என்னை விட்டு விடு என்று கெஞ்சியும் கேட்காமல், வாகனத்தின் இருக்கைகளுக்கு நடுவே கீழே தள்ளி, என்னை பலவந்தமாக பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வெளியே சொன்னால் என்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினார். எனக்கு ரத்தப்போக்கு இருந்ததால், அவரிடம் இருந்து என்னால் தப்பிக்கவும் முடியவில்லை. ஒருவேளை நான் செத்து போயிருந்தால், என் குழந்தைகள் அனாதை ஆயிருப்பார்கள். எனது அம்மாவிற்கு கண் தெரியாது. எனக்கு கணவர், அப்பா, உடன் பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை. எனக்கு கிடைக்கும் குறைந்த வருமானத்தில், எனது குழந்தைகள் மற்றும் அம்மாவை பராமரித்து கொண்டிருக்கிறேன்.
இந்த சம்பவத்தால் மனதளவிலும், உடல் அளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதுபோல வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, மூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறேன் என்னை விட்டு விடு என்று கெஞ்சியும் கேட்காமல், வாகனத்தின் இருக்கைகளுக்கு நடுவே கீழே தள்ளி, என்னை பலவந்தமாக பலாத்காரம் செய்தார். எனக்கு ரத்தப்போக்கு இருந்ததால், அவரிடம் இருந்து என்னால் தப்பிக்கவும் முடியவில்லை.
