புதுக்கோட்டை அருகே காரில் கடத்தி சென்று மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பலாத்காரம்

 

* மயங்கியதால் சாலையில் வீசிவிட்டு சென்ற கொடூரம்
* 2 பேர் கைது: 4 மணி நேரம் மக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் கடத்தி கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட வழக்கில் கார் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி இரண்டு கிராம மக்கள் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த திருமணமாகாத 35 வயது மாற்றுத்திறனாளி பெண், கடந்த 17ம்தேதி அரிசி ஆலைக்கு வேலைக்கு சென்றார். மாலை வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல பஸ்சில் ஏறி அமர்ந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த அந்த பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான 2 பேர், வீட்டில் இறக்கி விடுவதாக கூறினர்.

அந்த பெண், பஸ்சிலிருந்து இறங்கி காரில் ஏறி சென்றார். சிறிது தூரத்தில் உள்ள குளக்கரை அருகே கார் நின்றது. பின்னர் காருக்குள் வைத்து அந்த பெண்ணை 2 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த பெண் மயக்கமடைந்ததால் அவரை கறம்பக்குடி – ஆலங்குடி சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தள்ளி விட்டு சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த கறம்பக்குடி போலீஸ் ஏட்டு வாசுகி, மயக்க நிலையில் கிடந்த பெண்ணிடம் நடந்த விபரத்தை கேட்டறிந்ததோடு அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மழையூர் போலீசார் விசாரணை நடத்தியதில், மணக்கொல்லையை சேர்ந்த கார் உரிமையாளர் சேகர் (53), அவரது நண்பர் கூலித்தொழிலாளி மாரிமுத்து (52) ஆகியோர் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மலையூர் போலீசார், கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து மாரிமுத்துவை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். 4 தனிப்படையினர் தலைமறைவான சேகரை தேடி வந்த நிலையில் திண்டுக்கல்லில் அவரை நேற்று கைது செய்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதி மற்றும் நிவாரணம் வழங்கவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மழையூர் காவல் நிலையம் முன்பு புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் 2 கிராம மக்கள் நேற்று காலை 11.30 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிருந்தா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணின் திருமணம் ஆகாத சகோதரருக்கு ஊரக வளர்ச்சி துறையில் தற்காலிக அலுவலக உதவியாளர் பணி வழங்கப்படும், பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்திற்கு அதிகபட்ச நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், கைதான இருவர் மீதும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும், வழக்கை விரைந்து விசாரணை செய்து அதிகபட்ச தண்டனை வாங்கி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உத்திரவாதம் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து மறியல் போராட்டம் 3.30 மணிக்கு கைவிடப்பட்டது.

* மாற்றுத்திறனாளி பெண்ணை தரையில் படுக்க வைத்ததாக வீடியோ வைரல்

பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு மருத்துவமனையில் உரிய படுக்கை வசதி வழங்காமல், தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளதாக காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கலைவாணி கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய முறையில் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பெண் தனது படுக்கைக்கு கீழே அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்த போது, ஒரு சிலர் அத்துமீறி மருத்துவமனைக்குள் நுழைந்து அவரை வலுக்கட்டாயமாக தரையில் படுக்க வைத்து வீடியோ எடுத்துள்ளனர். இது குறித்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அத்துமீறி நுழைந்து தவறான தகவலை பரப்பிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: