புதுகை அருகே காரில் கடத்தி சென்று மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பலாத்காரம்: மயக்க நிலையில் ரோட்டில் தள்ளி விட்டு சென்ற கொடூரம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத 35 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பக்கத்து கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் வேலை செய்து வருகிறார். தினமும் காலை 9 மணிக்கு பஸ்சில் வேலைக்கு சென்று, மாலை 5 மணிக்கு வீடு திரும்புவார். வழக்கம் போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல பஸ்சில் ஏறி அமர்ந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த அந்த பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான 2 பேர், நாங்கள் உன் ஊர் வழியாக தான் செல்கிறோம். வீட்டில் இறக்கி விடுகிறோம் என கூறி காரில் வரும் படி அழைத்தனர். இதனால் அந்த பெண் பஸ்சிலிருந்து இறங்கி காரில் ஏறி சென்றார்.

சிறிது தூரத்தில் உள்ள குளக்கரை அருகே கார் நின்றது. பின்னர் காரில் இருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக மறைவான இடத்துக்கு தூக்கி சென்று 2 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். இதில் அந்த பெண் மயக்கமடைந்தார். இதையடுத்து 2 பேரும் அந்த பெண்ணை மீண்டும் காரில் ஏற்றி கறம்பக்குடி – ஆலங்குடி சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தள்ளி விட்டு விட்டு சென்று விட்டனர். மயக்கம் தெளிந்ததும் அந்த பெண் அழுது கூச்சலிட்டார். இதை பார்த்த அப்பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் பெண்ணிடம் விசாரித்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கறம்பக்குடி போலீஸ் ஏட்டு வாசுகி, பாதிக்கப்பட்ட பெண்ணை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, மழையூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண்ணை மணக்கொல்லையை சேர்ந்த கார் உரிமையாளர் சேகர்(53), அவரது நண்பர் கூலிதொழிலாளி மாரிமுத்து(52) சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

பின்னர் அவரை நேற்று ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். தலைமறைவான சேகரை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாற்றுத்தினாளி பெண்ணுக்கு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: