பெங்களூரில் இருந்து கொரியரில் கடத்தி வந்த 1 கிலோ கஞ்சா, 870 போதை மாத்திரைகள் பறிமுதல்: ஒருவர் கைது; 4 பேருக்கு வலை

தாம்பரம்: பெங்களூரில் இருந்து கொரியரில் கடத்தி வந்த 1 கிலோ கஞ்சா, 870 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், போதை பொருள் விற்பனை தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தாம்பரம் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி தலைமையில் தாம்பரம் பகுதியில் திடீர் சோதனை நடத்தி 30 ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படி கையில் பார்சலுடன் நின்றுகொண்டிருந்த தாம்பரம் அருகே வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த தினேஷா (எ) தினேஷ்குமார் (25) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த பார்சலில் 870 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ 26 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் இவரது கூட்டாளியான வெங்கட் (27) என்பவர் பெங்களூரில் உள்ள போதை பொருள் விற்பனை செய்யும் நபருக்கு தொடர்பு கொண்டு போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை ஆர்டர் செய்துள்ளார். அவர்கள் கொரியரில் போதை மாத்திரை, கஞ்சா அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில் வெங்கட், தனது நண்பர்கள் சக்திவேலு, சூர்யா, கோகுல் ஆகியோருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்நிலையில் தாம்பரத்தில் இருந்த தினேஷ்குமார் கொரியரில் ஆர்டர் செய்த போதை பொருள்களை பெற்றபோது போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் விசாரணையில், பெங்களூரில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலிடம் தொடர்பு கொண்டு குறைந்த விலையில் போதை மாத்திரைகளை வாங்கி தாம்பரம், காட்டாங் குளத்தூர், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள வெங்கட், சக்திவேலு, சூர்யா, கோகுல் ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: