27 பவுன் நகையை விற்று மோசடி; தவெக பிரமுகரை கைது செய்யுங்க… எஸ்பியிடம் தொழிலாளி புகார்

 

நாகர்கோவில்: செருப்பாலூர் மண்விளை பாறைவீடு பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். தொழிலாளி. இவர் நேற்று எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: கூலி தொழிலாளியான நான் கடந்த 2023ல் உறவினர்கள் மற்றும் எனது குடும்பத்தில் உள்ள நகைகள் என 27.5 பவுன் நகையை அரசு வங்கியில் அடமானம் வைத்து வீடு கட்டினேன். இந்த நிலையில் எனக்கு ரூ.50 ஆயிரம் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் குலசேகரம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் தவெக பிரமுகர் ஜெகதீஷ், எனது நகையை மீட்டு, அவர்களது தனியார் நிதி நிறுவனத்தில் வைத்து எனக்கு ரூ.50 ஆயிரம் தந்தார்.

சுமார் 3 மாதம் கடந்த பிறகு நகையை திருப்ப சென்ற போது, எனது நகைகள் அந்த நிதி நிறுவனத்தில் இல்லை. அவற்றை வேறு வங்கியில் வைத்து இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து என்னிடம் வட்டியை வாங்கி வந்தனர். பின்னர் நகை தொடர்பாக விசாரித்த போது எனது நகையை ஜெகதீஷ் உள்பட 7 பேர் சேர்ந்து விற்று இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். உடனே தவெக பிரமுகர் ஜெகதீஷ் முன் ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி தவெக பிரமுகர் ஜெகதீஷ் ஒரு மாதத்திற்குள் பத்மநாதபுரம் நீதிமன்றத்தில் 10 லட்ச ரூபாய் முன்பணம் செலுத்தி ஜாமீன் பெற உத்தரவிட்டனர். நான்கு மாதம் ஆகியும் ஜெகதீஷ் இதுவரை முன்ஜாமீன் பெறவில்லை. எனவே ஜெகதீஷ் உள்பட 7 பேரையும் கைது செய்வதுடன், எனது நகைகளை மீட்டு தரவேண்டும். மேலும் வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: