புதுடெல்லி: நாடு முழுவதும் 12 மாநிலங்களில் காலியாக இருக்கும் 26 மாநிலங்களவை எம்பி பதவிக்கு வரும் ஜூன் 18ல் தேர்தல் நடக்கிறது. நாடு தேர்தல் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 24 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் முடிவடைகிறது. குறிப்பாக ஆந்திரா(4), குஜராத் (4), ஜார்க்கண்ட் (2), மபி (3), மணிப்பூர் (1), மேகாலயா (1), ராஜஸ்தான் (3), அருணாச்சல் (1), கர்நாடகா (4), மிசோரம் (1) ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர். தேசியவாத காங்கிரசின் எம்பியாக இருந்து மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்ற சுனேத்ரா அஜித் பவார் மற்றும் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தலில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்பி சி.வி.சண்முகம் ஆகியோர் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களுக்கான இடைத்தேர்தலும் தற்போது நடத்தப்பட உள்ளது.
ஓய்வு பெறும் உறுப் பினர்களில் மாஜி பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் ரவ்னீத் சிங், ஜார்ஜ் குரியன் ஆகியோர் முக்கியமானவர்கள். இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ காலியாக இருக்கும் 26 மாநிலங்களவை இடங்களின் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. ஜூன் 8ம் தேதி மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். ஜூன் 9ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், ஜூன் 11ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஆகும். இதைத்தொடர்ந்து தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதையடுத்து ஜூன் 20ம் தேதிக்குள் தேர்தல் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு பெறும். இந்த தேர்தலில் வாக்குச்சீட்டில் விருப்பங்களை பதிவு செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்கும் ஊதா நிற ஸ்கெட்ச் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவெக சொன்னதை கச்சிதமாக முடித்த பிரவீன் சக்கரவர்த்திக்கு எம்பி பதவி
காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி தவெகவுக்கு அழைத்து வந்ததை பாராட்டி பிரவீன் சக்கரவர்த்திக்கு எம்பி பதவி வழங்க தவெக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மயிலம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ சிவி.சண்முகம் வெற்றி பெற்றுள்ள நிலையில் தனது எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதற்கான இடைத்தேர்தல் ஜூன் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிவி.சண்முகம் ராஜினாமா செய்த காரணத்தால், தற்போது அந்த இடத்தை தவெக கைப்பற்ற முனைப்பு காட்டும் என தெரிகிறது. இருப்பினும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு தவெக எம்பி பதவியை விட்டுக் கொடுக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி பிரவீன் சக்கரவர்த்தியை மாநிலங்களவை எம்பி வேட்பாளாராக தவெக முன்னிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு இடத்தை இழக்கும் பா.ஜ: 3 இடங்களை பெறும் காங்.
நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்களில் காலியாகும் 26 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு இடத்தை இழக்கக்கூடும் என்றும், அதே வேளையில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கூட்டணி 3 இடங்களைக் கூடுதலாகப் பெறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
