நாடு முழுவதும் வெப்ப அலை: 11 மாநிலங்களில் பள்ளிகள் மூடல்

 

புதுடெல்லி: நாடு முழுவதும் வெப்ப அலை நிலவுவதால் 11 மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கடும் வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக வடமாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதால், பல மாநிலங்கள் பள்ளி கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவித்துள்ளன.

ஏற்கனவே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் விடுமுறையை நீட்டித்துள்ளன. வானிலை ஆய்வு மையம் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை வீசுவதாக எச்சரித்துள்ளது. அந்த எச்சரிக்கையை போல் இந்தியாவின் பெரும் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை தொடர்ந்து வீசி வருவதால், மாணவர்களை அதீத வெப்பநிலையிலிருந்து பாதுகாக்க, பல மாநில அரசுகளும் மாவட்ட நிர்வாகங்களும் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவித்துள்ளன.

வட, மத்திய மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் கடுமையான வெப்ப அலை நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பள்ளிகளில் அவசரத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பீகாரில், நிலவி வரும் வெப்ப அலை காரணமாக பள்ளிகளின் செயல்பாடுகளில் தற்காலிக மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 5 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் மே 22 முதல் மே 26 வரை முழுமையாக ரத்து செய்யப்படும்.

அதே சமயம், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் காலை 10:30 மணி வரை மட்டுமே வகுப்புகளுக்கு வருவார்கள். இதே போல் பல மாநிலங்களில் கோடை விடுமுறையை நீட்டித்து அறிவித்துள்ளன. டெல்லியில் மே 11 முதல் ஜூலை 1 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் மே 20 முதல் ஜூன் 15 வரையும், பீகாரில் ஜூன் 1 முதல் ஜூன் 20 வரையும், ராஜஸ்தானில் மே 17 முதல் ஜூன் 20 வரையும், அரியானாவில் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரையும், பஞ்சாப் மாநிலத்தில் மே 25 முதல் ஜூலை 1 வரையும், தெலங்கானாவில் ஏப்ரல் 24 முதல் ஜூன் 11 வரையும், ஆந்திராவில் ஏப்ரல் 24 முதல் ஜூன் 11 வரையும், ஒடிசாவில் ஏப்ரல் 27 முதல் அறிவிப்பு வரும் வரையும், சட்டீஸ்கரில் ஏப்ரல் 20 முதல் ஜூன் 15 வரையும், மேற்கு வங்கத்தில் மே 11 முதல் மே 31 வரையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சட்டீஸ்கர் மாநிலத்தில் தான் இந்த ஆண்டு மிக நீண்ட கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கடுமையான வெப்பம் மற்றும் மோசமான வானிலை நிலவுவது குறித்து வானிலை ஆய்வு மையம் பலமுறை அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த போதிலும், பல பள்ளிகள் இன்னும் விடுமுறை அறிவிக்கவில்லை. எனவே மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, அனைத்துப் பள்ளிகளும் இந்த உத்தரவைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உபி மாநிலம் லக்னோ, நொய்டா மற்றும் காசியாபாத் போன்ற மாவட்டங்கள், விடுமுறைக் காலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே, காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தன. மேலும் பள்ளிகளை மூடுவதைத் தவிர, பல மாநிலங்களில் உள்ள கல்வித் துறைகள், வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், குடிநீர் வசதிகளை உறுதி செய்யவும், காலையில் மட்டுமே வகுப்புகளை நடத்தவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன.

Related Stories: