இந்தியா-சைப்ரஸ் உறவை வலுப்படுத்த நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி

 

புதுடெல்லி: சைப்ரஸ் மற்றும் இந்தியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டின் அதிபரிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோலஸ் கிறிஸ்துலைட்ஸ் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இந்தியா வந்த அதிபர் நிகோலசுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். அப்போது இருவரும், தங்களது இருதரப்பு உறவை மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தின. மேலும் உள்கட்டமைப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை எளிதாக்கும் வகையிலும் கூட்டு பணிக்குழு அமைக்கப்பட்டது. மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் உக்ரைன் மோதல் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். மோதல்கள் விரைவில் முடிவுக்கு வருவதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ஊடக அறிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளில் சைப்ரஸில் இருந்து இந்தியாவுக்கான முதலீடு ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் ஏராளமான புதிய வாய்ப்புகள் உருவாகி உள்ளன.இந்த சாதகமான சூழலை பயன்படுத்தி அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த முதலீட்டை மீண்டும் இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: