நாட்டில் நடைபெறும் சட்டவிரோத ​​ஊடுருவலை முறியடிப்பதே அடுத்த முக்கிய இலக்கு – BSF நிகழ்ச்சியில் அமித்ஷா பேச்சு

டெல்லி: நம் நாட்டில் நக்ஸலைட்டுகளும், அதன் ஆயுதப் பிரிவுகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதை முன்னுதாரணமாகக் கொண்டு, சட்டவிரோத ஊடுருவல்களுக்கு எதிராகவும் அதே தீவிரத்துடன் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) செயல்பட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்பு படை விழா ஒன்றில் பங்கேற்று பேசிய அமித் ஷா, பல தடிகள் மற்றும் சவால்கள் இருந்தாலும் கூட, BSF படை தொடர்ந்து தேசத்தின் பெருமையை நிலைநாட்டி வருகிறது என்று பாராட்டு தெரிவித்தார்.

சட்டவிரோத ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல், கள்ள நோட்டுப் புழக்கம் மற்றும் ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தல் போன்ற அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அமித்ஷா சுட்டிக்காட்டினார். எனவே ஒருங்கிணைந்த மற்றும் விரிவான பாதுகாப்பு கட்டமைப்பு அவசியம். குறிப்பாக மாநில காவல்துறை, மத்திய ஆயுதப் படைகள், உளவுத்துறை அமைப்புகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையே அதிக ஒருங்கிணைப்பு தேவை என்று குறிப்பிட்டார்.

எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றிப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த ஊடுருவலைத் தடுத்து நிறுத்த தற்போது நேரம் வந்துவிட்டது. ‘நக்ஸல் இல்லாத இந்தியா’ எனும் பிரச்சாரத்தை மேற்கொள்ள துவங்கிய போது பல ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் அது கடினம் என்று கூறினார். ஆனால் இந்த நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக நின்றது. இதனால் ஐம்பது ஆண்டுகளாக நீடித்து வந்த நக்சல் பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா இப்போது நக்ஸல் இல்லாத நாடாக மாறியுள்ளது என்றார்.

இதனை தொடர்ந்து நாட்டில் நடைபெறும் சட்டவிரோத ​​ஊடுருவலை முறியடிக்கும் பணியில் BSF அதே உறுதியுடன் தொடர்ந்து செயல்பட வேண்டும். சட்டவிரோத ஊடுருவல் நிகழக்கூடியதாக அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட இடங்கள் குறித்த தகவல்கள் BSF மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு விரைவில் வழங்கப்படும். இதன் பின்னர் அவர்களை அடையாளம் கண்டு நாட்டை விட்டு வெளியேற்றும் பணி துவங்கும் என்றார்.

Related Stories: