அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி பிரச்சாரம்: சமூக வலைதளத்தில் புயலைக்கிளப்பிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

 

சத்ரபதி சம்பாஜிநகர்: சமூக ஊடகங்களில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் நையாண்டி டிஜிட்டல் அரசு கடந்த 16ம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது சிஜேபி என பிரபலமாக அறியப்படும் இந்த அமைப்பு ஆம் ஆத்மி கட்சியுடன் முன்பு தொடர்புடையவரும் பாஸ்டன் பல்கலைக்கழக மாணவருமான அப்ஜித் டிப்கேவால் தொடங்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் இந்த அமைப்பு பலகோடி பின்தொடர்பவர்களை பெற்றுள்ளது. சமூக வலைதளத்தில் புயலைக்கிளப்பிய இந்த அமைப்பின் அசுர வளர்ச்சியானது மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் வசிக்கும் சிஜேபி நிறுவனரான அபிஜித் டிப்கேவின் பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பெற்றோர், தங்களது மகனின் இந்த நடவடிக்கை குறித்து அறிந்ததில் இருந்து தங்களுக்கு தூக்கம் தொலைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அபிஜித் தயார் அனிதா பேசுகையில், ‘‘எனது மகன் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக ஒரு வேலையை பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். அவன் பத்திரமாக வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது மட்டுமே எங்களது விருப்பம்.

அவன் அரசியலில் தொடர்வதா இல்லையா என்பது அவனது தனிப்பட்ட முடிவு. ஆனால் அவன் அரசியலை தொடர்வதை நாங்கள் விரும்பவில்லை. அவன் எங்கள் பேச்சை கேட்பானா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. இந்த விஷயத்தில் நான் அவனுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன். அவனை நினைத்து நான் மிகவும் கவலையில் உள்ளேன்” என்றார்.

இதேபோல் அபிஜித்தின் தந்தை கூறுகையில், ‘‘சமூக ஊடகங்களில் சிஜேபிக்கு கிடைத்திருக்கும் அதீதப் பிரபலம் என்னை மிகுந்த கவலைக்குள்ளாக்கி உள்ளது. அவன் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டதால் நான் மிகவும் கவலையடைகிறேன். ஏனெனில் இத்தகைய நபர்கள் கைது செய்யப்படுவதுண்டு. அவனுக்கு என்ன நேருமோ என்றுகவலைப்பட்டு கடந்த இரண்டு இரவுகளாக எங்களால் தூங்க முடியவில்லை” என்றார்.

இதனிடையே இந்தியாவில் முடக்கப்பட்ட சிஜேபி கரப்பான் பூச்சிகள் எக்ஸ் வலைதள பக்கம் முடக்கப்பட்டது. சிஜேபியின் புதிய எக்ஸ் தள கணக்கு மற்றும் அதன் இன்ஸ்டாகிராம் தளம் வாயிலாக ஒருபோதும் இறப்பதில்லை என்ற முழுக்கத்துடன் புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. மீண்டும் களமிறங்கியுள்ளன.

ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரும் இணைய வழி மனுவிற்கு ஆதரவு அளிக்குமாறு சிஜேபியின் நிறுவனர் அபிஜித் டிப்கே தன்னை பின்தொடர்பவர்களை கேட்டுக்கொண்டுள்ளார். ‘‘கரப்பான் பூச்சிகளே நீங்கள் அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்? இணையத்தில் நீங்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதாக அனைவரும் பாராட்டுகின்றனர்.

ஆனால் இப்போது நாம் களத்தில் இறங்கி உண்மையான பணிகளை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் கருதுகிறேன். கல்வி அமைச்சர் தனது பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாம் ஒரு மனுவை தொடங்குகிறோம்” என்று தனது வீடியோ செய்தியில் அபிஜித் தெரிவித்துள்ளார்.

Related Stories: