புதுச்சேரியில் 28 எம்எல்ஏக்கள் பதவியேற்பு; விஜய் போட்டோவை காட்டி உறுதிமொழி: தவெக எம்எல்ஏவுக்கு சபாநாயகர் கண்டிப்பு

 

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் 28 எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உறுதிமொழியில் இல்லாத சிலவற்றை எம்எல்ஏக்கள் கூறியதை கண்டித்ததால் விவாதமும் சலசலப்பும் ஏற்பட்டது. புதுச்சேரியில் தேஜ கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்தது. முதல்வராக ரங்கசாமி, அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவி ஏற்றனர். தொடர்ந்து, 16வது சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதவிவேற்க வசதியாக தற்காலிக சபாநாயகர் அன்பழகனுக்கு கடந்த 18ம் தேதி கவர்னர் கைலாஷ்நாதன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து, எம்எல்ஏக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நேற்று காலை சட்டசபை மைய மண்டபத்தில் நடந்தது. தற்காலிக சபாநாயகர் அன்பழகன் திருக்குறள் வாசித்து அவையை துவக்கி வைத்தார். சட்டசபையின் புனித தன்மையை காக்க வலியுறுத்தி எம்எல்ஏக்கள் எழுந்து நின்று சிறிது நேரம் அமைதி காத்தனர். முதலாவதாக மங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் ரங்கசாமி கடவுளறிய எனக்கூறி உறுதிமொழி எடுத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி மற்றும் சிவக்கொழுந்து, ராஜவேலு, நாஜிம், திருமுருகன் என வரிசையாக 27 எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி கூறி பதவியேற்றனர்.

மணவெளி தொகுதி தவெக எம்எல்ஏ ராமு, உறுதி மொழி வாசிப்பின்போது கடவுளறிய எனக்கூறி தனது சட்டை பையில் இருந்த தமிழக முதல்வர் விஜயின் படத்தை காட்டி பதவியேற்றார். இதனை பார்த்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன், ‘‘ஏற்கனவே 1008 கடவுள் இங்கு இருக்கும் போது, 1009 ஆவது இவர் என்ன புதிய கடவுளா?. இதுபோன்று ஆர்வம் மிகுதியால் புகைப்படங்களையோ அல்லது உறுதிமொழிக்கு மீறிய வார்த்தைகளையோ பயன்படுத்தக் கூடாது. இதையெல்லாம் வெளியில் வைத்துக்கொள்ளுங்கள்’’ என்ரு காட்டமாக தெரிவித்தார். திருபுவனை தொகுதி எம்எல்ஏ சாய்.ஜெ.சரவணன்குமார் பதவியேற்பில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து, பதவியேற்பு விழா நிறைவடைந்த பின்னர் சபாநாயகர் அறையில் தனியாக சென்று சாய்.ஜெ. சரவணன்குமார் பதவியேற்றுக்கொண்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை
சட்டமன்றத்தின் முக்கிய நிகழ்வுகளில் முதலில் தமிழ்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படும். ஆனால் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவின் போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படவில்லை. இது குறித்து நேரு எம்எல்ஏ அவையின் கவனத்துக்கும் கொண்டு வந்தார். ஆனால் இதற்கு சபாநாயகர் பதில் அளிக்கவில்லை.

அதிமுகவை உடைக்க முயற்சியா? லீமாரோஸ் ஓட்டம்
புதுச்சேரி எம்எல்ஏ பதவியேற்பு நிகழ்ச்சியை காண வந்த லீமா ரோஸ் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எனது மகன் எம்எல்ஏவானது சந்தோஷம். மக்களுக்கு நல்லது செய்யவே எங்கள் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்துள்ளோம். நான் அமைச்சராவது இறைவனின் சித்தம்தான். தவெக அமைச்சரவையில் அதிமுக 8 அமைச்சர்கள் கோரியுள்ளதாக தவறாக யூடியூபில் போடுகிறார்கள். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவதூறாக பேசுவோர் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் உள்ளோம்’’ என்றார்.

அப்போது, ‘‘அதிமுகவை இரண்டாக உடைப்பது நீங்கள்தான் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளாரே’’ என நிருபர்கள் கேட்டபோது, ‘‘அதெல்லாம் ஒன்றும் கிடையாது. எனது மகன் ஜோஸ் சார்லஸ் எம்எல்ஏ பதவியேற்புக்கு வந்துள்ளேன்’’ என்றார். அப்போது அவருடன் வந்தவர்கள் தமிழக அரசியல் குறித்து இங்கே கேள்வி கேட்க கூடாது எனக்கூறி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: