* சினிமா பட பாணியில் டீனுடன் ஆலோசனை
* அதிகாரம் என்னென்னே அட்ராசிட்டி செய்யும் தவெகவினர்
* இது எங்க போய் முடியுமோ?
* டாக்டர்கள், நோயாளிகள் புலம்பல்
சென்னை: சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என அவதூறு வழக்கில் கைதான துபாய் செவிலியர் ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் வெள்ளை கலர் கோட்டு போட்டுக்கொண்டு திடீர் ஆய்வு செய்த சம்பவம் நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு தமிழகம் முழுவதும் பல விசித்திரமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. சினிமா காட்சிகள் போல் பல இடங்களில் தவெகவினர் ‘எங்கள் அண்ணன் தான் முதல்வர்’ என்று கூறிக்கொண்டு அரசு அலுவலகங்களில் பறக்கும் படை போன்று அதிரடி ஆய்வுகள் செய்து வரும் சம்பவம் தற்போது நடந்து வருகிறது.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தவெக பெண் நிர்வாகி வாசுதேவி, தன்னை தமிழக வெற்றிக் கழக மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் என்று கூறிக்கொண்டு தன்னுடன் வாலிபர்களை அழைத்து கொண்டு, ‘வெள்ளை கலர் கோட்’ போட்டு கொண்டு திடீர் ஆய்வு செய்துள்ளார். அவர், தன்னை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் என்ற நினைப்பில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து வருகைப்பதிவேடு சரிபார்ப்பு, எத்தனை பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் என்ன என்று அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவமனை டீன் மற்றும் டாக்டர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
அதோடு இல்லாமல் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நன்றாக இருக்கிறதா என்றும் தனது ஆதரவாளர்களுடன் அங்கும் இங்கும் நடந்து சென்று சோதனை நடத்தியுள்ளார். தன்னுடன் தனியார் டிவியையும் அழைத்துக் கொண்டு சென்று ஆய்வு செய்துள்ளார். இதை விட கொடுமை என்னவென்றால், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்னையில் இருந்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் யாரோ வருகிறார்கள் என்று மருத்துவமனையில் பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் இடையே தகவல் பரவியுள்ளது. இதனால் மருத்துவமனையை நேற்று முன்தினம் இந்த ‘துபாய் செவிலியரை’ வரவேற்க காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கடைசியில் தவெக பெண் நிர்வாகியான வாசுதேவி, தனது அதரவாகர்களுடன் உள்ளூர் யூடியூப் சேனல்கள், டிவிக்களை அழைத்து கொண்டு வந்து, மருத்துவமனையை ஆய்வு செய்வதை படம் பிடித்துள்ளனர். நோயாளிகளிடம் உங்களுக்கு சரியாக மருத்துவம் அளிக்கப்படுகிறதா என்றும் கேட்டுள்ளனர். நோயாளிகளும் ‘வெள்ளை கோட்டு எல்லாம் போட்டு இருக்காங்க….பெரிய டாக்டர் அம்மாவாக இருப்பாங்களோ’ என்று நினைத்து, அவர்கள் குறைகளையும் தவெக பெண் நிர்வாகியிடம் தெரிவித்துள்ளனர். அதை உடனே வாசுதேவி உடன் மருத்துவமனையில் பணியில் இருந்து டாக்டர்களிடம் கூறி உடனே சரி செய்ய உத்தரவும் அளித்துவிட்டு அங்கிருந்து கிளப்பிட்டார்.
பின்னர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய பெண் யார் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, தான் எம்எல்சி செவிலியராக படித்துவிட்டு துபாயில் உள்ள மருத்துவமனையில் சில ஆண்டுகள் பணியாற்றியது தெரியவந்தது. இவர் விஜய் கரூர் பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது துபாயில் இருந்து தனது யூடியூப் சேனலில் ‘கூட்ட நெரிசலுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம்’ என்று எந்த வித ஆதாரங்களும் இன்றி வீடியோ பதிவு ெசய்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் படி சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில் பெண் செவிலியர் வாசுதேவியை கைது செய்தனர்.
பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவர் என தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டதால், துபாயில் அவர் பணியாற்றும் இடத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதோடு இல்லாமல் தன்னை தவெகவின் தீவிர ஆதரவாளர் என்று தன்னை தானே யூடியூப் சேனல்களில் முன்நிறுத்தி கொண்டு சுற்றி வருவதும் தெரியவந்தது. இது போன்று அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களில் தவெக நிர்வாகிகள் என்று அவரவர் சோதனை நடத்தினால் பொதுமக்களின் நிலைமை என்ன ஆகும்.
அரசு துறைகளில் இது போல் தனி நபர் சோதனை நடத்த யார் உரிமை கொடுத்தது. அதற்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது. இது போல் ஒவ்வொரு தனி மனிதனும் சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்தால், எப்படி அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை செய்வார்கள் என டாக்டர்கள், நோயாளிகள், பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
விதிமீறி வெள்ளை கோட்
சங்கரன்கோவில் மருத்துவமனை ஆய்வு நடத்திய வாசுதேவி தென்காசி மாவட்டம், கடையநல்லூரை சேர்ந்தவர். இவர் தனது காரில், தவெக மருத்துவரணி அமைப்பாளர் என்றும், பி.எச்டி படித்து வருவதாக போர்டு வைத்து உள்ளார். பொதுவாக, டாக்டர்கள் மட்டுமே முழு கை வெள்ள கோட் அணிவார்கள். நர்சிங் முடித்தவர்கள் அரை கை வெள்ள கோட் போட மட்டுமே அனுமதி உண்டு. இந்த விதியை மீறி நர்சிங் முடித்து உள்ள வாசுதேவி, முழு கை வெள்ள கோட் அணிந்து டாக்டர் போல் ஆய்வு செய்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
யார்ன்னு கூட தெரியாம எப்படி உள்ளே விட்டீங்க… டாக்டர்களுக்கு அதிகாரிகள் டோஸ்
தவெக நிர்வாகி சங்கரன்கோயில் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த விவகாரம் தொடர்பாக, தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், தவெக நிர்வாகியின் சோதனையின் போது உடன் இருந்த மருத்துவமனை டீன், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் ‘யார் சோதனை செய்ய வருகிறார்கள் என்று கூட தெரியாமல் அவர்களுக்கு விளக்கம் அளிப்பீர்களா…. சோதனை செய்ய வந்த பெண் அரசு டாக்டரா, அல்லது அரசு அதிகாரியா, இல்லை எம்எல்ஏவா, உள்ளாட்சி துறை நிர்வாகியா…
உள்ளூர் கவுன்சிலரா என சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர். எந்த அரசு பணிகளிலும் இல்லாத ஒரு பெண் செவிலியர் தன்னை தவெக மருத்துவ அணி நிர்வாகி என்று கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்டார் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவமனைக்குள் எப்படி விடலாம் என்று என கடுமையாக சாடியுள்ளனர். இந்த தவறுக்கு யார் காரணம் என்று தென்காசி மாவட்ட சுகாதரத்துறை அதிகாரிகள் சங்கரன்கோயில் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
அதிகாரிகள் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை: சுகாதார துறை இணை இயக்குநர்
தென்காசி மருத்துவம் மற்றும் சுகாதார துறை இணை இயக்குநர் டாக்டர் பிரேமலதா கூறுகையில் ‘இந்த சம்பவம் நடக்கும்போது நானும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியும் கலெக்டர் மீட்டிங்கில் கலந்து கொண்டிருந்தோம். பொதுவாக துறை அதிகாரிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே ஆய்வு செய்ய முடியும். மற்றவர்கள் ஆய்வு செய்ய முடியாது என்பது குறித்து அனைத்து மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் மருத்துவ துறையிடம் எந்த அனுமதியும் பெறாமல் வந்து ஆய்வு செய்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.
கட்சியினர் ஆய்வு செய்ய கூடாது: கலெக்டர் கண்டிப்பு
தென்காசி கலெக்டர் கமல் கிஷோரிடம் கேட்டபோது கூறுகையில் ‘அரசு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் அந்தந்த பகுதிகளில் சென்று ஆய்வு மேற்கொள்வர். மக்கள் குறைகளை கேட்டு அறியலாம். ஆனால் கட்சியினருக்கு அவ்வாறு ஆய்வு செய்ய அனுமதி இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து இன்னும் எனக்கு முழுமையான தகவல் வரவில்லை. வந்த பிறகு அது குறித்து விசாரிக்கப்படும்’’ என்றார்.
