சென்னை: காலையில் டெண்டர் விடப்பட்டு, மாலையில் பணி ஆணை வழங்கப்பட்ட விவகாரத்தில் ஊரக உள்ளாட்சி துறை அலுவலர்கள் ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு பெண் அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி துறையில் நேற்று முன்தினம் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. அதாவது காலையில் டெண்டர் வழங்கப்பட்டு, அன்று மாலையே அதாவது 6 மணி நேரத்தில் டெண்டர் ஓப்பன் செய்யப்பட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் பணி ஆர்டர் வழங்கப்பட்ட சம்பவம்தான் அது. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒரு இ-டெண்டர் வெளியிட்டுள்ளார்.
அதில், காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிகுப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரப்பேட்டை கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுமான பணிக்காக ரூ.16 லட்சத்து, 83 ஆயிரத்து 194 மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு இருந்தது. இதில் அடுத்து நடந்ததுதான் சுவாரஸ்யம். அதாவது, 19ம் தேதி (நேற்று முன்தினம்) காலை 9 மணிக்கு டெண்டர் கோரும் அறிவிப்பு வெளியானது. மாலை 3 மணிக்குள் டெண்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாலை 4 மணிக்கு டெண்டர் ஓப்பன் செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது, டெண்டர் பணிகள் அனைத்தும் 6 மணி நேரத்துக்குள் முடிவடையும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த டெண்டர் தொடர்பான தகவல்கள் எதுவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்படவில்லை என்பது கூடுதல் தகவல் ஆகும். இதுபோன்ற டெண்டர் தமிழக அரசால் கோரப்படுவது உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்று ஊரக உள்ளாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது ஊரக உள்ளாட்சி துறை அமைச்சராக இருப்பவர் புஸ்சி ஆனந்த். அவரது துறை மூலமே இந்த டெண்டர் கோரப்பட்டு இருந்தது. இதுபற்றிய தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த டெண்டர் நேற்று முன்தினம் மாலையே உடனடியாக ரத்து செய்யப்பட்டு விட்டதாக ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் உத்தரவிட்டார்.
விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதியில் 2025-26ம் ஆண்டிற்கான 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் சுமார் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான ஆன்லைன் டெண்டர் விடப்பட்டன. இந்த டெண்டர் விடப்பட்ட சில மணி நேரத்திலேயே மூடப்பட்டதால் ஒப்பந்ததாரர்கள் இடையே சர்ச்சை எழுந்தன.
விசாரணையை அடுத்து தற்போது வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர் கயல்விழி ஆகிய இருவரும் ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை இணை இயக்குனர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
