சென்னை: தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகள் மற்ற மாநில மருத்துவமனைகளை ஒப்பிடுகையில் சிறந்ததாக உள்ளது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மற்றும் மருத்துவர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சுகாதாரத்துறை பற்றி முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் அனுபவத்தை சிறப்பாக மாற்ற வேண்டும். பொதுவாக அரசு மருத்துவமனையில் சுத்தமாக இருக்காது, முறையாக காத்திருப்பு அறை இருக்காது, கழிவறை சுகாதாரமாக இருக்காது என்ற பொது மக்களிடையே ஒரு கருத்து உள்ளது.
ஆனால் தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகள் மற்ற மாநில மருத்துவமனைகளை ஒப்பிடுகையில் சிறந்ததாக உள்ளது. இருப்பினும் இன்னும் மேம்படுத்த வேண்டும், அது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். தனியார் மருத்துவமனை செலவு அதிகமாக ஏற்படுகிறது ஆனால் அரசு மருத்துவமனையில் அனைத்து வகையான சிகிச்சையும் தரமான முறையில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தரமான மருத்துவர்கள், தேவையான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் தேவையில்லாமல் பரிசோதனை மேற்கொள்கின்றனர், ஆனால் அரசு மருத்துவமனைகளில் அப்படி இல்லை.
எனவே அரசு மருத்துவமனையில் நம்பகத்தன்மையை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் விரைவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற உள்ளது. அரசுத் துறையை நாங்கள் நம்பவில்லை என்றால் யார் நம்புவார்கள்? கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
