சென்னை: தமிழக கோயில் நிதியை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகம் ஆகியவற்றில் முதலீடு செய்ய அனுமதித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு ஒன்றிய, மாநில அரசுகள், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில்களின் உபரி நிதியை தமிழ்நாடு அரசின் நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில், அறநிலையத்துறை சட்டத்தின் முதலீட்டு விதிகளில் திருத்தம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், கோயில் நிதியை வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடைவிதிக்கக் கோரியும் சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், கோயில் சொத்துக்களையும், நிதியை பாதுகாக்கும் நோக்குடன் அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்ட நிலையில் சட்டத்துக்கு முரணாக, அரசு உத்தரவு அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2700 கோடி ரூபாய் கோயில் நிதி சட்டவிரோதமாக அரசு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் கோயில்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவி சேஷாத்திரி, வழக்கறிஞர் பி.ஜெகநாத் ஆகியோர் வாதிட்டனர். இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், ஒன்றிய, மாநில அரசுகள், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகம், ரிசர்வ் வங்கி ஆகியவை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
