தமிழ்நாட்டில் பிஎம்ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை: முதல்வர் விஜய் உறுதி அளித்ததாக ஏபிவிபி மாநில செயலாளர் பேட்டி

 

சென்னை: தமிழ்நாட்டில் பிஎம்ஸ்ரீ திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளதாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாநில செயலாளர் பன்னீர்செல்வம் கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏவிபிவி) தமிழக பிரதிநிதிகள் குழு நேற்று முதல்வர் விஜய்யை சந்தித்தனர். பின்னர் நிருபர்களிடம் அமைப்பின் மாநில செயலாளர் கூறியதாவது: கல்வி நிலையங்களின் தரம் மற்றும் செயல்பாடு, உயர்கல்வி, மாணவர் நலன் மற்றும் வளாகப் பாதுகாப்பு உள்ளிட்ட 16 கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் எங்கள் மாணவத் தலைவர்களின் கருத்துகளை மிகவும் பொறுமையுடனும், தீவிர கவனத்துடனும் கேட்டறிந்தார். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள மாணவர் சங்கத் தேர்தல்கள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். இந்தத் தடை அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் கல்வியியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து கடுமையான வலியுறுத்தலானது வைக்கப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாநில அரசு கையெழுத்திடாத காரணத்தால், ரூ.2,000 கோடிக்கும் மேலான ஒன்றிய அரசின் நிதியுதவியை தமிழ்நாடு இழந்து வருகிறது.

அந்த நிதி கிராமப்புற பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கானது. அரசியல் கணக்கீடுகள் எதுவாக இருந்தாலும், அந்த நிதியை மாணவர்களுக்குக் கிடைக்காமல் தடுப்பது தவறான செயலாகும். இதில் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோம். அதற்கு தமிழ்நாட்டில் பிஎம்ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முறையாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: