விளையாட்டு வீரர்கள் அனைவரும் உயர்கல்வியை கண்டிப்பாக நிறைவு செய்யவேண்டும்: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிவுரை

 

சென்னை: விளையாட்டு வீரர்கள் அனைவரும் உயர் கல்வியை கண்டிப்பாக நிறைவு செய்யவேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிவுரை வழங்கினார். அகில இந்திய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டிகள் புதுச்சேரியில் வரும் 22.05.2026 முதல் 29.05.2026 வரை நடைபெறவுள்ளதையொட்டி, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், நேற்று தமிழ்நாடு ஜூனியர் கூடைப்பந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் பேசியதாவது: சாதனைகள் புரிய விடாமுயற்சியும், கடின உழைப்பும் மிக முக்கியம். குறிப்பாக விளையாட்டு பயிற்சி நேரங்கள் முடிந்து சிறிதுநேர ஓய்விற்கு பின் உடனடியாக படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

விளையாட்டு வீரர்கள் அனைவரும் உயர் கல்வியை கண்டிப்பாக நிறைவுசெய்தால்தான், விளையாட்டுத் துறை பணி ஒதுக்கீட்டின் போது உயர் அலுவலர்கள் நிலையிலான பணியினை தேர்வு செய்ய முடியும். பொதுவாக விளையாட்டு வீரர்கள் என்றாலே தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக அறியப்படுவார்கள். அந்த வகையில் தற்பொழுது பங்கேற்கவுள்ள போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்று நம் தமிழ்நாட்டிற்கும் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டுமென இத்தருணத்தில் வாழ்த்துகிறேன். கண்டிப்பாக நீங்கள் பங்கேற்கும் போட்டிகளை நேரில் பார்க்கவும் திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

Related Stories: