ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய கோரி தமிழகத்தில் மருந்து வணிகர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம்: மக்கள் அவதி

 

சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் என கோரி தமிழகம் முழுவதும் மருந்து வணிகர்கள் நேற்று ஒரு நாள் முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்தில், உயிர்காக்கும் மருந்துகள் மக்களுக்கு எளிமையாக கிடைக்கும் வகையில், ஆன்லைன் மருந்தகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பல்வேறு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு இருந்தது. இப்போதும் இந்த முறை தொடர்கிறது. ஆனால் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாமல், ஆன்லைன் மருந்தகங்கள் போதை, ஊக்க மருந்துகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதனை ஒன்றிய அரசு தடுக்கவும் மற்றும் தடை செய்யவும், அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம், நேற்று நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்தது. தமிழ்நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட மருந்து வணிகர்கள் கடையடைப்பு நடத்தினர். மருத்துவமனை உடன் இருக்கும் மருந்தகம், அரசு மருந்தகம் என 5000 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. சில இடங்களில் மருந்து கிடைக்கவில்லை என மக்கள் குற்றம்சாடினர். மருந்து கிடைக்காமல் பலர் அவதிப்பட்டனர். ஒன்றிய, மாநில அரசுகள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: