ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மூக்கையூர் கடற்கரையில் கடந்த 23.3.2022 அன்று சுற்றுலாவுக்கு காதலனுடன் கல்லூரி மாணவி வந்தார். அப்போது, காதலனை தாக்கி கட்டிப்போட்டு விட்டு ஒரு கும்பல், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகள், காதலன் அணிந்திருந்த வெள்ளி நகைகளையும் மிரட்டி பறித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக சாயல்குடி போலீசார், 6 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, கமுதி அருகே கே.வேப்பங்குளத்தை சேர்ந்த பத்ம ஈஸ்வரன் (26), விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நத்தகுளம் தினேஷ்குமார் (26), கமுதி அருகே பசும்பொன் அஜித்குமார் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
திருடிய நகைகளை வாங்கி வைத்திருந்த பத்ம ஈஸ்வரனின் தாய் வில்லம்மாளையும் (45) கைது செய்தனர். இந்த வழக்கை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி கே.கவிதா விசாரித்து பத்ம ஈஸ்வரன், தினேஷ்குமார், அஜித்குமார் ஆகியோருக்கு தலா 30 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும், வில்லம்மாளுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
