புதுடெல்லி: டெல்லியில் நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் வகையில் ஓடும் பேருந்தில் பெண் கூட்டு பலாத்காரம் செய்த ஓட்டுநரும், நடத்துநரும் கைது செய்யப்பட்டனர். வடமேற்கு டெல்லியின் பிதம்புரா பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். இவர் மங்கோல்புரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு இவர் வேலையை முடித்து விட்டு வீடு திரும்புவதற்காக சரஸ்வதி விகாரில் உள்ள பி-பிளாக் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது, அங்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் அருகே நடந்துநர் நின்றிருந்தார்.
அவரிடம் அந்த பெண் நேரம் என்ன? என்று கேட்டார். அவர், திடீரென அந்த பெண்ணின் கைகளை பிடித்து இழுத்து பேருந்துக்குள் தள்ளி பஸ்சை எடுத்து சென்றனர். அந்த பெண்ணை ஓட்டுநரும், நடத்துநரும் ஒருவர்பின் ஒருவராக பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்த பெண்ணை ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டுத் தப்பி சென்றனர். போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அந்த பெண்ணின் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர். பெண் அளித்த தகவலின் அடிப்படையில் ஷாகில் மல்கோத்ரா என்பவருக்கு சொந்தமான ஆம்பனி பேருந்தை பறிமுதல் செய்தனர். பின்னர் ஓட்டுநரையும், நடத்துநரையும் கைது செய்தனர்.
