தூத்துக்குடியில் ரவுடி சரமாரி குத்திக்கொலை: தடுத்த நண்பருக்கும் கத்திக்குத்து

 

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரவுடிகள் இடையே நடந்த மோதலில் ஒரு ரவுடி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த மோதலில் மேலும் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது. முதல்வர் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க உத்தரவிட்ட 4 நாளில் போதை மோதலில் நடந்துள்ள இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஸ்னோவின் (28). இவர் மீது கடந்த 2019ம் ஆண்டு தூத்துக்குடியில் கோயில் பூஜையில் ஈடுபட்டிருந்த திருநங்கை ஒருவரை கொலை செய்த வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தூத்துக்குடி வடபாகம் போலீசில் குற்றவாளிகள் பட்டியலில் இடம் ெபற்றுள்ளார். இவரது நண்பர் பூபாலராயர்புரம் சூசை (24). இவர் மீதும் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி தாளமுத்துநகர் மேட்டுபட்டி அருகே கடற்கரையில் மறைவான பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

இந்நிலையில் லூர்தம்மாள்புரம் ரவுடி சந்தனராஜ் (எ) பாண்டி (25), மேட்டுபட்டி முத்துக்குமார் (எ) கருப்பு (25) ஆகியோர் அவர்களது நண்பர்கள் சிலருடன் அமர்ந்து அதேபகுதியில் மது அருந்தியுள்ளனர். அருகருகே அமர்ந்து மது அருந்திய அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்குகொருவர் அவதூறான வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சந்தனராஜ் கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் ஸ்னோவின் மற்றும் சூசை ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

தகவலின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஸ்ேனாவின் பரிதாபமாக உயிரிழந்தார். சூசை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய சந்தனராஜ், முத்துக்குமார் உள்ளிட்ட 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களில் இது 3வது கொலை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: