திருவாரூர் அருகே பயங்கரம்; தாத்தா, பாட்டியை கொன்று டீசல் ஊற்றி எரித்த பேரன்: கஞ்சா போதையில் வெறிச்செயல்

மன்னார்குடி: திருவாரூர் அருகே தாத்தா, பாட்டியை கஞ்சா போதையில் கொன்று டீசல் ஊற்றி எரித்த பேரனை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த காரக்கோட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து (72). இவரது மனைவி சந்திரா (66). இவர்களது மகன் கலியபெருமாள் (55). இவரது மனைவி தேவி (50). இவர்களுக்கு அய்யப்பன் (30) என்ற மகன் உள்ளார். பொறியியல் பட்டதாரியான அய்யப்பன், மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர். வெளியூர்களில் போதை மறுவாழ்வு மையங்களில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.

அதே போல் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை பெற்று சமீபத்தில் தான் மன்னார்குடி வந்துள்ளார். வீட்டுக்கு வந்தும் போதை பழக்கத்தை நிறுத்தவில்லை. இந்நிலையில் கணவன் – மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கலியபெருமாள் தனது மனைவி தேவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். காரக்கோட்டை இந்திரா நகரில் தாய் தேவியுடன் மகன் அய்யப்பன் வசித்து வருகிறார். மலேசியாவில் பல ஆண்டுகளாக கலியபெருமாள் வேலை பார்த்து வருகிறார். தந்தை கலியபெருமாளிடம் அய்யப்பன் தொடர்பில் இருந்து வந்தார்.

இதில் அவருடன் செல்போனில் அடிக்கடி பேசுவதுடன், தனக்கு தேவைப்படும்போது தந்தையிடம் பணம் கேட்டு வாங்கிக்கொள்வாராம். போதைக்கு அடிமையான தனது மகனுக்கு, சமீபகாலமாக பணம் அனுப்புவதை தந்தை கலியபெருமாள் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்த அய்யப்பன், தனது தந்தை வழியான தாத்தா பிச்சமுத்து வீட்டிற்கு அடிக்கடி சென்று உங்கள் மகன் எனது அம்மாவையும் பிரிந்து சென்று விட்டார்.

எனக்கும் பணம் அனுப்புவதில்லை, செல்போனில் தொடர்பு கொண்டாலும் அவர் எடுப்பதில்லை என்று கூறி அடிக்கடி தாத்தாவிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கமாம். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு தாத்தா பிச்சைமுத்து, பாட்டி சந்திரா வீட்டில் இருந்தபோது, அங்கு கஞ்சா போதையில் சென்ற அய்யப்பன் தனது தாத்தா, பாட்டியுடன் வழக்கம் போல் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஒரு கட்டத்தில் தாத்தா பிச்சைமுத்துவின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி உள்ளார்.  அதனை தடுக்க வந்த பாட்டி சந்திராவை நாற்காலியால் சரமாரி தாக்கி உள்ளார்.

இதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அய்யப்பன், அந்த பகுதியில் இருந்த பெட்ரோல் பங்குக்கு சென்று கேனில் டீசல் வாங்கி வந்து பிச்சமுத்து, சந்திரா ஆகியோரது உடலில் தெளித்து தீ வைத்து விட்டு தனது வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை தாய் தேவியிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவாரூர் எஸ்பி கரூண் கரட், மன்னார்குடி டிஎஸ்பி மணிவண்ணன், வடுவூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார், பாதி எரிந்த நிலையில் இருந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக பிச்சைமுத்து, சந்திராவின் மகள் அமுதா (45) வடுவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அய்யப்பனை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அய்யப்பனின் தாய் தேவியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த தாத்தா, பாட்டியை கஞ்சா போதையில் பேரனே அடித்து கொன்று உடலை டீசல் ஊற்றி எரித்த சம்பவம் மன்னார்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: