தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் வீட்டில் 2 மாதமாக கஞ்சா செடி வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தண்டையார்பேட்டை வஉசி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சாசெடி வளர்ப்பதாக புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்ேபாது ஒரு வீட்டில் துணியால் மறைத்து கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்தது. விசாரணையில், கஞ்சா செடியை வளர்த்து வந்தது தண்டையார்பேட்டை வஉசி நகரை சேர்ந்த எட்வின் ராஜ் பிரண்டோ (28) என்பதும் தவெக ஆதரவாளர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் திருமணமான ஒரு வருடத்தில் தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தற்போது தந்தையுடன் எட்வின் ராஜ் பிரண்டோ வசித்து வருகிறார். தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி வேலையும் பார்த்து வருகிறார். பார்ட் டைமாகவும் வேலை செய்து வந்ததுள்ளார். வீட்டில் தவெக கொடி கட்டி வைத்துள்ளார். கடந்த 2 மாதங்களாக கஞ்சா செடியை யாரும் பார்க்காமல் இருப்பதற்காக துணி போட்டு மூடி மறைத்து வளர்த்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா செடியை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து எட்வின் ராஜ் பிரண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தவெக ஆதரவாளர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
