திருமலை: ஆந்திர மாநிலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வைத்து ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டத்தில் பலர் பணத்தை இழந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாகப்பட்டினம் காவல்துறை ஆணையர் சங்கபிரதா பாக்சி உத்தரவின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கோவா மாநிலத்தை மையமாக கொண்டு நெட்வொர்க் அமைத்து நாடு முழுவதும் ‘பர்ஸ்ட் பேர் பிளே’, ‘ரெட்டி அண்ணா’, ‘எக்ஸ்சேஞ்ச் 666’ போன்ற பெயர்களில் ஒரு கும்பல் செயலிகளை உருவாக்கி ஆன்லைன் சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது. இந்த கும்பல் சமூக ஊடகங்கள் மற்றும் டெலிகிராம் மூலம் இளைஞர்களை கவர்ந்து வெவ்வேறு நபர்களின் பெயர்களில் உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் பணப்பரிவர்த்தனை நடத்தியுள்ளனர்.
இந்த கும்பலின் மொபைல் டேட்டாக்களின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பவானிபிரசாத் ராவ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சூதாட்ட கும்பல் கொல்கத்தாவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கொல்கத்தாவிற்கு சென்று அம்மாநில போலீசார் உதவியுடன் ரீஜென்ட் பார்க் பகுதியில் பதுங்கியிருந்த கப்பர், சரசாஅகர்வால், அரவிந்த் விரிடி, கரண்சிங், சையத் அமானத் ஹுசைன், அம்புஜ் கோபி, பராஸ் அகர்வால் உள்ளிட்ட 24 பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 57 செல்போன்கள், 130 வங்கி கணக்கு புத்தகங்கள், 33 ஏடிஎம் கார்டுகள், 4 லேப்டாப், ரூபாய் நோட்டுகள் எண்ணும் 2 இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், நாடு முழுவதும் 530 போலி வங்கி கணக்குகள் மூலம் இவர்கள் பணம் பரிவர்த்தனை செய்துள்ளனர். இதில் 240 வங்கி கணக்குகள் ஸ்டேட்மெண்ட் பெற்றதில் ரூ.500 கோடி வரை சூதாட்டம் மூலம் மோசடி செய்துள்ளனர். மீதமுள்ள 300 வங்கி கணக்கு விவரம் பெற்றால் ரூ.1000 கோடிக்கு மேல் பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து போலீசார் ரூ.2 கோடியை முடக்கியுள்ளனர். மீதமுள்ள பணத்தை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் கைதான 24 பேரையும் விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
