அறந்தாங்கி: போதையில் அண்ணனை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியை சேர்ந்தவர் ரகுமான்கான்(45). இவரது தம்பி இதிரிஸ்(40). மீனவர்கள். இதிரிசுக்கு திருமணமாகவில்லை. குடும்ப பிரச்னை காரணமாக ரகுமான்கானை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.
சகோதரர்கள் இருவரும் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி வீட்டில் ஒன்றாக வசித்தனர். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் இருவரும் சண்டை போட்டு கொள்வார்களாம். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் இரண்டு பேரும் அதிகமாக மது அருந்தி விட்டு போதையில் சண்டையிட்டுள்ளனர்.
அப்போது இதிரிஸ் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ரகுமான்கான் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரகுமான்கான் அந்த இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ரகுமான்கான் உடலை பிரேத பரிசோதனைக்கு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து இதிரிசை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள சிறையில் அடைத்தனர்.
