கடன் தள்ளுபடி கேட்டு வேளாண் கூட்டுறவு வங்கியை விவசாயிகள் திடீர் முற்றுகை

க.பரமத்தி, பிப்.26: க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட அஞ்சூர் ஊராட்சியில் பில்லாபாளையம் பகுதியில் பாண்டியலிங்கபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டுறவு வங்கியை சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டனர். தகவலறிந்த அதிகாரிகள், தென்னிலை போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டுறவு சங்கம் மூலம் கடந்த ஆண்டு 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் கடன் தனித் தனியாக வழங்கப்பட்டதாகவும், இதனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தியதாகவும் கூறினர். தற்போது அரசால் அறிவித்த பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தில் உரிய காலத்தில் திருப்பி செலுத்திய 50 பேரை இணைத்து பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். அதிகாரிகள் இது சம்மந்தமாக தெரிவிப்பதாக கூறினர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: