கணவனை கொன்று புதைத்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ஊட்டி : கணவனை கொன்று புதைத்த மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜசேகர் (32). இவரது மனைவி இந்து சன்னி (25). இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி அருகே உள்ள மத்தம் அக்ரஹாரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், இந்து சன்னிக்கும் கூடலூர் பகுதியைச் சேர்ந்த லிண்டோ ஜோசப் (30) என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த ஜஸ்டின் ராஜசேகர் கண்டித்துள்ளார். இதனால், இருவரும் சந்திக்க முடியாமல் தவித்து வந்தனர். தங்களது தகாத உறவுக்கு இடையூறாக உள்ள ஜஸ்டின் ராஜசேகரை தீர்த்துக் கட்டி விட்டு, மறுமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.

இதையடுத்து, கடந்த 19.08.2017 அன்று இரவு சுமார் 11 மணியளவில், திட்டமிட்டபடி இந்து சன்னியும், லிண்டோ ஜோசப்பும் இணைந்து, ஜஸ்டின் ராஜசேகரை அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்தனர். பின்னர், அவரது உடலை மத்திகிரி மயானத்திற்கு எடுத்துச் சென்று, யாருக்கும் தெரியாமல் புதைத்தனர்.

அதன் பின்னர், சில நாட்களில் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கோபு முன்பு, இந்து சன்னி ஆஜராகி தனது கணவனை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து விசாரித்து, இந்து சன்னி மற்றும் அவரது கள்ளக்காதலன் லிண்டோ ஜோசப் ஆகிய இருவரையும் கைது செய்தார். இந்த வழக்கு ஓசூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த நீதிபதி சந்தோஷ், நேற்று தீர்ப்பளித்தார். குற்றம்சாற்றப்பட்ட இந்து சன்னி மற்றும் லிண்டோ ஜோசப் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்தார்.

அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனையும், தடயங்களை மறைத்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும் விதித்தார்.

அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் ஒரு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சின்னபில்லப்பா ஆஜராகி வாதாடினார்.

Related Stories: